அமைச்சர் எம்.சி.சம்பத் உறவினர் கல்வி, நிதி நிறுவனங்களில் ரெய்டு: தர்மபுரியில் அதிரடி

தர்மபுரி: அமைச்சர் எம்.சி.சம்பத் உறவினரின் கல்வி, நிதி நிறுவனங்களில் நேற்று வருமானவரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக விஐபிக்களின் முக்கிய கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று மாலை தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத்தின் சம்பந்தி தர்மபுரி டிஎன்சி இளங்கோவனின் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர்.

பென்னாகரம் சாலையில் உள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று மாலை 5 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள், போலீஸ் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் 25 பேர் 6 வாகனத்தில் வந்தனர். அதன் பின்னர் பள்ளியின் மெயின் கேட் பூட்டப்பட்டு சோதனை தொடங்கியது. மாலையில் துவங்கிய இச்சோதனை இரவு வரை நீடித்தது. அதேபோல தர்மபுரி, சென்னை தி.நகரில் டிஎன்சி நிதி நிறுவன அலுவலகங்களிலும், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் சிக்கிய பணம், ஆவணங்கள் குறித்து விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.

டிஎன்சி இளங்கோவன் தமிழக திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் முக்கிய பொறுப்பாளராகவும், தனியார் பள்ளி கூட்டமைப்பு மாநில செயலாளராகவும் உள்ளார். இவருக்கு ஓசூரில் மெட்ரிக் பள்ளி உள்ளது. சட்டமன்ற தேர்தல் நடக்கும் நிலையில், தர்மபுரியில் அமைச்சரின் உறவினர் நிறுவனங்களில் நடந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>