×

அதிமுக, பா.ஜ. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்: கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் வராது; முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் வராது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். குமரி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார். நாகர்கோவில் செட்டிக்குளம் சந்திப்பு, தோவாளை, ஆரல்வாய்மொழியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

கடந்த தேர்தல்களில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் இல்லாததால் இந்த மாவட்டத்துக்கு பல திட்டங்கள் வராமல் போனது. இந்த பகுதி மக்கள் பிரச்னைகள் எங்களிடம் கொண்டு வரப்படவில்லை. கன்னியாகுமரியில் சரக்குப்பெட்டக துறைமுகம் வருவதாக அவதூறு செய்தி பரப்புகிறார்கள். நான் இப்போது உறுதி அளிக்கிறேன். கன்னியாகுமரியில் சரக்குப்பெட்டக துறைமுகம் அமைக்கப்பட மாட்டாது. துறைமுக திட்டத்துக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி நியமனம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு விட்டது.

 நாகர்கோவிலை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது அதிமுக அரசு தான். தேர்தல் சமயத்தில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். தடையில்லா மின்சாரம் வழங்குகிறோம். அதிகமான தொழிற்சாலைகள் தமிழகத்துக்கு வருகின்றன. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உயர் கல்வி பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விவசாயம், மீன்பிடி தொழிலுக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். மீனவர்களின் பழுதடைந்த வீடுகளுக்கு பதிலாக காங்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மானியத்தோடு, வரி விலக்கோடு விசைப்படகுகளுக்கு வழங்கும் 18,000 லிட்டர் டீசல், இனி 20,000 லிட்டராக வழங்கப்படும். மண்ணெண்ணெய் மானியம் ரூ.3400 ல் இருந்து 4500 ஆக உயர்த்தப்படும். மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து, 7500- ஆக வழங்கப்படும். மீனவர்கள் பயன் பெற மீன்வள வங்கி ஏற்படுத்தப்படும்.

கடலில் மீன் பிடிக்கும் போது இயற்கை சீற்றம் மற்றும் பிற காரணங்களால் உயிரிழக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கு மீனவர் நிவாரண நிதி 2 லட்சத்தில் இருந்து, ஐந்து லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். உள்நாட்டு மீனவர்களுக்காக விரிவான திட்டங்கள் கொண்டுவரப்படும். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் இடையே ரூ.20 கோடியில் பாலம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். போடி தேவர் சிலை அருகே நேற்று நடந்த பிரசாரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பேசியதாவது: ஆற்றல் மிக்கவர். இவர் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இந்த தொகுதியில் பட்டி, தொட்டி, மூலை முடுக்கு எல்லாம் அறிந்தவர். எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் உங்கள் வேட்பாளர் ஓபிஎஸ்சும் ஒருவர் என்றார்.

Tags : AIADMK ,BJP ,Kanyakumari ,Chief Minister ,Edappadi Palanisamy , Edappadi Palanisamy
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...