கடைசி ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா - இங்கிலாந்து பலப்பரீட்சை: தொடரை வெல்லப் போவது யார்?

புனே: இந்தியா - இங்கிலாந்து அணிகளிடையேயான ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றப் போவது யார் என்பதை முடிவு செய்யும் ‘த்ரில்’லான கடைசிப் போட்டி இன்று நடைபெறுகிறது. கடந்த மாத தொடக்கத்தில் இந்தியா வந்த இங்கிலாந்து அணி, முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. அடுத்து நடந்த டி20 தொடரையும் அந்த அணி 2-3 என்ற கணக்கில் இழந்தது. ஆனால், இந்த 2 தொடர்களிலும் கோப்பை யாருக்கு என்பதில் கடைசிப் போட்டி வரை பரபரப்பு நீடித்தது. டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் இங்கிலாந்து வென்றிருந்தால் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்திருக்கும் என்பதுடன், ஐசிசி உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இந்தியா இழந்திருக்கும்.

அதேபோல் டி20 தொடரிலும் 4 போட்டிகளின் முடிவில் 2-2 என்ற கணக்கில் இழுபறி நீடிக்க, கடைசி போட்டியில் இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், ஒருநாள் போட்டித் தொடரில் 2 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்கின்றன. இன்று நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியில் வெல்லும் அணியே தொடரை கைப்பற்றும் என்பதால், ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு த்ரில்லர் காத்திருக்கிறது.

இரு அணி பேட்ஸ்மேன்களுமே பார்மில் இருப்பதால் 350+ இலக்கு நிர்ணயித்தால் கூட போதுமானதாக இருக்குமா என்பது கேள்விக்குறி தான். 2வது போட்டியில் பேர்ஸ்டோ - ஸ்டோக்ஸ் இணைந்து ஆடிய ருத்ரதாண்டவம், இந்தியா தனது பந்துவீச்சு வியூகத்தை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது. குல்தீப் சுழல் சுத்தமாக எடுபடாததால் சாஹலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ‘யார்க்கர் கிங்’ நடராஜன் சேர்க்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. மொத்தத்தில், சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இன்றைய போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு சரியான விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியா: கோஹ்லி (கேப்டன்), ரோகித், தவான், கே.எல்.ராகுல், பன்ட், ஹர்திக், க்ருணல், சூரியகுமார், கில், வாஷிங்டன், புவனேஷ்வர், ஷர்துல், நடராஜன், சிராஜ், பிரசித், சாஹல், குல்தீப். இங்கிலாந்து: பட்லர் (கேப்டன்), ராய், பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ், மாலன், லிவிங்ஸ்டோன், சாம் கரன், டாம் கரன், மொயீன், பில்லிங்ஸ், பார்கின்ஸன், ரஷித், டாப்லி, மார்க் வுட்.

Related Stories:

>