ஒலிம்பிக் தகுதிச்சுற்று படகு போட்டி: இந்திய அணி அறிவிப்பு

சென்னை: ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக ஜப்பானில் நடைபெற உள்ள ஆசிய தகுதிச்சுற்று போட்டியில் பங்கேற்க உள்ள 14 பேர் கொண்ட இந்திய படகோட்டும் குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் நாடுகளுக்கான தகுதிச்சுற்று கண்டம் வாரியாக, நடைபெற்று வருகிறது. அதன்படி ஆசியா / ஒசனியா நாடுகளுக்கான படகோட்டும் போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டிகள் கொரியாவில் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா பீதி காரணமாக மே மாதம் நடைபெற இருந்த போட்டியை நடத்த கொரியா மறுத்து விட்டது. அதனால் ஆசிய தகுதிச்சுற்று போட்டியையும் நடத்த ஜப்பான் முன்வந்துள்ளது. அதன்படி படகோட்டும் விளையாட்டுக்கான தகுதிச் சுற்று மே 5, 6, 7 தேதிகளில் டோக்கியோவில் நடைபெற உள்ளது.

அதற்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்காக வீரர்களுக்கான முகாம் புனேவில் உள்ள ராணுவ படகோட்டும் மையத்திலும், வீராங்கனைகளுக்கான முகாம் போபாலிலும் நடந்தன. இந்த முகாம்களில் இருந்து வீரர்கள் ஜாகர் கான், அர்ஜுன் லால், அரவிந்த் சிங், சுனி அத்ரி , வீராங்கனைகள் குஷ்பிரீத் கவுர், வித்யா சங்கத், ருக்மணி தாங்கி, சோனா கீர் என 8 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கான தகுதிச்சுற்று பாரா படகோட்டும் போட்டிக்கு கமாண்டர் சாந்தனு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களை தவிர 5 பேர் கொண்ட பயிற்சியாளர்கள் குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய படகோட்டும் விளையாட்டு கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.வி.ராம், ‘ஜப்பான் ஒலிம்பிக்கிற்கான, ஆசிய தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய குழு அடுத்த மாதம் ஜப்பான் புறப்பட்டுச் செல்லும்’ என்று கூறியுள்ளார்.

Related Stories:

>