அடிப்படை தேவைகளை செய்துள்ளேன்: அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம்

தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் கல்மண்டபம் பகுதியில் உள்ள ஷாபியா பள்ளிவாசல்   இமாமிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பள்ளிவாசலில்  அமைச்சருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி, புத்தகங்கள் வழங்கி சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொழுகை முடித்து வந்த இஸ்லாமிய மக்களிடமும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பின்னர் ராயபுரம் பகுதியில்  பிரசாரத்தை தொடங்கினார். வண்ணாரப்பேட்டை பகுதியில் வியாபாரிகள், கிறிஸ்துவ பாதிரியார்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ‘ராயபுரம் தொகுதியில் 4 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று உள்ளேன். இந்த தொகுதியில் கழிவுநீர், சாலை, மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளேன். ராயபுரம் தொகுதி மக்களுக்கு பல்வேறு கால கட்டங்களிலும் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளேன்.

அரசு வழங்கும் நிவாரணங்களை நேரடியாக சென்று மக்களுக்கு பெற்று கொடுத்துள்ளேன். புயல் வந்த போதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோதும் மக்களுக்கு நேரடியாக சென்று நிவாரண உதவி செய்தேன். இப்படி ராயபுரம் தொகுதியில் பல்வேறு வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளேன். மீண்டும் பாடுபடுவேன். உங்களில் ஒருவனாகவும், உங்கள் வீட்டு பிள்ளையாகவும் இருந்து சேவை செய்வேன். உங்கள் பிரச்னையை எப்போது வேண்டுமானாலும் சொல்லுங்கள். உடனே தீர்த்து வைப்பேன்,’ என்றார்.

Related Stories: