×

ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்: தேர்தல் பணிக்கு செல்லும் ஊழியர்களுக்கு சுங்க கட்டணம் விலக்கு

நெல்லை: தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு சுங்க கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டுமென்று ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்.6ம் தேதி நடக்கிறது. சட்டமன்ற தேர்தல் பணியில்  நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் 20 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு ஏப்.6ம் தேதி நடக்கும் நிலையில் 2ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தேர்தல் பணியாற்றும் தொகுதிகளுக்கு தேர்தல் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.  அரசு ஊழியர்கள் பணிபுரிகிற தொகுதி விட்டு வேறு தொகுதிகளுக்கு வாக்குபதிவுக்கு செல்ல உள்ளனர். இதனால் பல கிமீ தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே வாக்குப்பதிவுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏப்5, 6ல் வாக்கு சாவடிகளுக்கு செல்லும் போதும், ஊருக்கு திரும்பும் போதும் பெண்கள் பலர் வாடகை கார் மற்றும் சொந்த வாகனங்களில் செல்லும் நிலை உருவாகி உள்ளது.

எனவே தேர்தல் பணிக்காக செல்லும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் சுங்கச்சாவடி கட்டணம் ஏதும் வசூலிக்காமல் இருமுறையும் வருவதற்கும், செல்வதற்கும் சுங்க கட்டண விலக்கு அளிக்க தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட வேண்டும். இவ்வாறு நெல்லை, தென்காசி மாவட்ட அனைத்து ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் செய்யது இப்ராகீம் மூசா, மாவட்ட செயலாளர் பாபு செல்வன், ஒருங்கிணைப்பாளர்கள் பெரியதுரை, செல்வநாயகம், ராஜேந்திரன், நிர்வாகிகள் ஆரோக்கியராசு, மோதிலால்ராஜ், சாம் மாணிக்கராஜ், மாரியப்பன், பிளஸ்ஸிங், ஜான் பாரதிதாசன் ஆகியோர் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Teachers Federation , Teachers Federation, Electoral Mission, Customs, Exemption
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்