அமைச்சர் விஜயபாஸ்கர் ஊழியர் வீட்டில் 14 மணி நேரம் ஐடி ரெய்டு ரூ.50 லட்சம், கோடிக்கணக்கில் தங்கம், சொத்துகள் பறிமுதல்

திருச்சி:  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்தினருக்கு சொந்தமான கல்லூரியில் பணியாற்றும் ஊழியர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 14 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் ₹50 லட்சம் ரொக்கம், கிலோ கணக்கில் தங்கம், கோடிக்கணக்கில்  சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இத்தொகுதியில் பண பரிமாற்றம் நடப்பதால் இதை கண்டுகொள்ளாத மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட காவல் அதிகாரியை மாற்ற வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கருத்துக்கணிப்புகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. இதில், திமுகதான் வெற்றி பெறும் என முடிவுகள் வெளியாகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த அதிமுகவினர் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் மாநிலம் முழுவதும் அதிமுக வேட்பாளர்களுக்கு மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் மூலம் பணம் சப்ளை செய்யப்பட்டது. ஒரு தொகுதிக்கு ₹12 கோடி வீதம் விநியோகம் செய்யப்பட்டது. இந்தப் பணம் தற்போது மாவட்டச் செயலாளர்கள் அல்லது மண்டல பொறுப்பாளர்களிடம் இருந்து தொகுதி பொறுப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணத்தை கண்டு பிடிக்க ரோந்துப் பணிகளையும், வாகனச் சோதனைகளையும் அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. ஆனால் அதிகாரிகள்

கண்டுகொள்ளவில்லை. இந்தநிலையில் தற்போது பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பணியையும் ஆளும்கட்சியினர் தொடங்கி விட்டனர்.

சில இடங்களில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு, குறிப்பிட்ட ஆட்களிடம் பணம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சில இடங்களில் வீடு வீடாக பணம் விநியோகம் செய்யப்படுகிறது. மாநிலம் முழுவதுமே பணம் விநியோகம் ஜரூராக நடந்து வருகிறது. சேலத்தில் பணத்துடன் பிடிபட்ட முன்னாள் எம்எல்ஏவை அதிகாரிகள் விட்டு விட்டனர். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கோவையில் இரு நாட்களுக்கு முன் கலெக்டர் ராசாமணி, மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் மாற்றப்பட்டனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அதிமுக வேட்பாளரின் மகன் காரில் ரூ.1 கோடி பணம் சிக்கியது. ஆனால் காரில் இல்லாமல் அருகில் கீழே கிடந்ததாக அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இதனால் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக திருச்சி கலெக்டர் சிவராசு, எஸ்பி ராஜன், சப்கலெக்டர் விஷ்ணுமகாஜன் ஆகியோர் மாற்றப்பட்டனர். இந்நிலையில், விராலிமலை அருகே கடந்த 2 நாட்களுக்கு முன் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட அதிமுக சேலைகள் மற்றும் பொருட்கள், அமைச்சரின் பெயரில் இருந்த டைரி சிக்கியது. அதில் பொருட்கள் வினியோகித்த பகுதிகள், முக்கிய நபர்கள் பெயர்கள் பட்டியல் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்தினருக்கு சொந்தமான கல்லூரியில் பணியாற்றும் ஊழியர் வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மகாலிங்கம் மகன் வீரபாண்டி(32). இவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் அண்ணன் உதயகுமாரின் பிஏவாக உள்ளார். விராலிமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் தடுப்பு பிரிவில் கண்காணிப்பாளராகவும்(தற்காலிக ஊழியர்) உள்ளார். இலுப்பூர் மேட்டு சாலையில் உள்ள சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கரின் குடும்பத்தினருக்கு சொந்தமான கல்லூரியிலும் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீடு விராலிமலையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று மதியம் 1 மணிக்கு இவரது வீட்டிற்கு திருச்சி மண்டல துணை ஆணையர் அனுராதா தலைமையிலான வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேர் 4 கார்களில் வந்து அதிரடி சோதனை நடத்தினர். இதில் அவரது வீடு முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். பின்னர் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் பக்கத்தில் வாடகை விட்டிருந்த அவருக்கு சொந்தமான 8க்கும் மேற்பட்ட வீடுகளிலும் சோதனை நடத்தினர்.

மாலை 4 மணி அளவில் வருமான வரித்துறையினர் 3 பேர் மட்டும் வெளியே வந்து காரில் திருவேங்கைவாசலில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரியில் சோதனை நடத்தினர். 5 மணிக்கு மீண்டும் அவர்கள் வீரபாண்டியின் வீட்டுக்கு தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். மேலும், 4 மணி அளவில் மதுரையிலிருந்து நில மதிப்பீட்டாளர்கள் 3 பேர் காரில் வந்தனர். அவர்கள் வீரபாண்டி வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர். இவர்கள் வீரபாண்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்களை மதிப்பிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் இரவு 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். மதியம் 1 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இன்று அதிகாலை 2 மணிக்கு முடிந்தது. 13 மணி நேரமாக நடந்த இந்த சோதனையில் ₹50 லட்சம் பணம், கிலோ கணக்கில் தங்கம், கோடி கணக்கில் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அவற்கை அட்டை பெட்டியில் வைத்து பேக் செய்து வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர் பகுதியில் பறக்கும் படை வாகன சோதனையில் காரில் பரிசு பொருட்கள், அமைச்சர் பெயரில் இருந்த டைரி சிக்கியதால் வருமான வரித்துறையில் விராலிமலை தொகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தகவல் வந்தததால் நேற்று அமைச்சருக்கு நெருங்கிய வீரபாண்டி வீட்டில் சோதனையிடப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். வீரபாண்டி மூலமாகதான் இந்த தொகுதியில் பணப்பரிமாற்றம் உள்ளிட்ட முக்கிய பரிமாற்ற்ங்களை அரங்கேறியதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது கைப்பற்றப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்ட பணமா? என தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணைய கெடுபிடிக்கு மத்தியில் விராலிமலை தொகுதியில் பண பரிமாற்றம் நடப்பதால் இதற்கு காவல் துறை அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உடந்தை இல்லாமல் செய்யமுடியாது என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் 6 மாதங்களுக்கு முன் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டபோது புதுக்கோட்டை கலெக்டராக நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன் சுகாதாரத்துறையில் பணியாற்றினார்.

இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர் சிபாரிசால் தான் அவர் புதுக்கோட்டைக்கு நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விசுவாசத்தில் அமைச்சர் சொல்வதை கலெக்டர் தட்டமாட்டாராம். இதேபோல் எஸ்பி பாலாஜி சரவணன் கடந்த ஒரு ஆண்டாக பணியாற்றி வருகிறார். பண பரிமாற்றத்தை தடுக்க காவல் துறை வட்டாரத்திலும் பெரிய அளவில் நடவடிக்கை இல்லை என்றே கூறப்படுகிறது. தற்போது சட்டசபை தேர்தல் நேரத்தில் அமைச்சருக்கு ஆதரவாக மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர், காவல் துறை அதிகாரிகள் செயல்பட வாய்ப்புள்ளதாகவும், அவர்களை உடனே மாற்ற வேண்டும் வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>