×

மண்ணுக்கு புகழ் பெற்ற தொகுதியில் மகுடம் சூடப் போவது யார்?திருப்தியான வரவேற்பால் திமுகவுக்கு வெற்றி முகம்

*அதிருப்தி அலையால் அல்லாடுது அதிமுக முகாம்

*தொகுதி ரவுண்ட் அப்

சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய தொகுதி பெருமைக்குரிய மானாமதுரை சட்டமன்ற தொகுதியானது ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மாவட்ட எல்லைகளுக்கு அருகே அமைந்துள்ளது.  தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,36,397 பேர்,  பெண் வாக்காளர்கள் 1,40,354 பேர், இதரர் 10 பேர் என மொத்தம் 2,76,761 வாக்காளர்கள் உள்ளனர்.

வாழ்க்கை உயரலைங்க...:  விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்கள், கட்டுமானத்தொழிலாளர்கள், செங்கல் உற்பத்தியாளர்கள் என தினக்கூலி தொழிலாளர்களை அதிகம் கொண்ட தொகுதி என்ற பெருமை மானாமதுரைக்கு உண்டு. மண் பாண்ட தொழிலுக்கு பிரசித்தி பெற்ற தொகுதி. கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் இருந்து அடுத்தடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் தேர்வாகியும், தொகுதி மக்களுக்கான  வாழ்க்கை தரத்தை உயர யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தொகுதியில் வைகை ஆறு பாசனம் மூலம் நெல், தென்னை, வாழை, கரும்பு என சிறப்பாக விவசாயம் செய்து வந்த விவசாயிகள், அதிமுக ஆளுங்கட்சி பிரமுகர்களின் மணல் திருட்டு காரணமாக 8 ஆண்டுகளாக விவசாயத்தை கைவிடும் அளவுக்கு விரக்தியில் உள்ளனர். அதே போல சிலைமான் முதல் மானாமதுரை வேதியரேந்தல் வரை நீண்ட அகலமான வைகையாற்றில் போடப்பட்டுள்ள குடிநீர் திட்டங்கள் மூலம் 5 மாவட்ட மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைத்து வந்தது.

குடிநீர் தட்டுப்பாடு...: ஆறுகள், அதனை ஒட்டியுள்ள கால்வாய்களில் தினமும் திருடப்படும் நூற்றுக்கணக்கான மணல் லோடுகளால் விவசாயம் அழிந்ததுடன் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது தான் அதிமுக அரசின் சாதனையாக இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.  நகரில் 3 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வருகிறது. மகளிர் சுயஉதவிக்குழுக்களை கடந்த 8 ஆண்டுளாக கண்டுகொள்ளாததால், தினக்கூலி தொழிலாளர்கள் கந்துவட்டி கும்பலிடம் சிக்கி தங்களது பணத்தை இழந்து வருகின்றனர்.

இயற்கை வளம் சூறை...:கிராம பெண்கள் மைக்ரோ பைனான்ஸ் எனும் தனியார் அமைப்புகளிடம் பணம் பெற்று திரும்ப கட்ட முடியாத அளவிற்கு வட்டித்தொகை இருப்பதால் கடனை அடைக்க முடியாமல் தவிக்கின்றனர். குடிமராமத்து பெயரில் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஒன்றிய கிராமங்களில் உள்ள கண்மாய்களில் தூர்வாருவதாக கூறி ஆளுங்கட்சியினர் சட்டவிரோதமாக சவடு மண், கிராவல் மண் அள்ளியதால் நீர்நிலைகள் அலங்கோலமாக காட்சியளிக்கின்றன. ஆளும்தரப்பினருடன் அதிகாரிகள் கமிஷன் பெற்றுக்கொண்டு இயற்கை வளங்களை சூறையாடுவதால்  சுற்றுப்புற கிராமங்களில் வறட்சி தாண்டவமாடுகிறது.

குற்றவாளிகள் உலா...: மானாமதுரை தொகுதிக்குட்பட்ட இருநூறுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த பிப்ரவரி மாதம் பெய்த மழையால் சேதமான பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செலுத்தியும், விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 14 காவல்நிலையங்களிலும் சட்டம், ஒழுங்கும் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. நகை பறிப்பு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பகலில் கூட அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது.

சிட்டிங் எம்எல்ஏக்கு சீட்...:வரும் தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக சிட்டிங் எம்எல்ஏ, நாகராஜன் களத்தில் உள்ளார்.  ஜெயலலிதா மறைவுக்கு பின் டிடிவி அணிக்கு தாவிய எம்எல்ஏவாக இருந்த மாரியப்பன் கென்னடி பதவி பறிக்கப்பட்டது. இதில் ஏற்பட்ட இடைத்தேர்தலில் மீண்டும் நாகராஜன் வெற்றி பெற்றார். இவரே மீண்டும் தொகுதியில் நிறுத்தப்பட்டிருப்பது பலருக்கு அதிருப்தியைத் தந்துள்ளது.

இவர் இடைத்தேர்தலில்  அறிவித்த வாக்குறுதிகளை மீண்டும் நிறைவேற்றப்போவதாக, கூறுவது மக்களிடம் நகைப்பை தந்துள்ளது. தொகுதியில் இதுவரை செய்யாததையா அதிமுக இனிமேல் செய்யபோகிறது? என்று மக்களே கேலி பேசும் அளவிற்கு அதிமுக, அமமுக இருவரையும் விமர்சிக்கின்றனர்.

ரிப்பீட்டு...:  கடந்த காலங்களில் அதிமுக எம்எல்ஏக்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளான மானாமதுரை கன்னார்தெருவில், தரைப்பாலம், கலைக்கல்லூரி, சிப்காட் தொழிற்பேட்டையை விரிவுபடுத்தி வேலைவாய்ப்பு, சிப்காட் பேருந்து பணிமனை விரிவாக்கம், திருப்புவனத்தில் பஸ் ஸ்டாண்ட், வாரச்சந்தை, இளையான்குடியில் பஸ் ஸ்டாண்ட், இளையான்குடியில் விவசாயிகளுக்கு குளிர்சாதன தானிய சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட வாக்குறுதிகள் மண் குதிரையை ஆற்றில் விட்டது போல ஆகி விட்டது. எதையுமே நிறைவேற்றவில்லை. இதே வாக்குறுதிகளுடன் அதிமுக வேட்பாளர் மீண்டும் வலம் வருவது மக்களிடம் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

திட்டங்கள் தந்த திமுக...:  திமுக கூட்டணியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தமிழரசி போட்டியிடுகிறார். அமைச்சராக இருந்து பல்வேறு பணிகள் செய்தவர் என்பதால், யாரையும் எளிதாக அணுகுகிறார். இத்தொகுதியில் திமுக காலத்தில் பல்வேறு பெரும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அனைத்து கிராமங்களிலும் தார்ச்சாலை, சுகாதார வளாகம், ஊராட்சி மன்ற கட்டிடங்கள் போன்ற முக்கிய திட்டங்கள் திமுக காலத்தில்தான் நிறைவேற்றப்பட்டது. இது மக்களிடம் நன்மதிப்பை தந்துள்ளது.  அமமுகவில் முன்னாள் எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி நிற்கிறார். தொகுதிக்குள் அறிமுகமானவர் என்ற முறையில் அதிமுக ஓட்டை கணிசமாக பிரிக்கும் நிலை இருக்கிறது. அத்தோடு அதிமுகவில் கோஷ்டி பூசல்கள் இருப்பதும், உள்ளடி வேலைகள் நடப்பதும், ஓட்டுகளை சரியச் செய்யும் நிலை இருக்கிறது.

மாற்றத்தை நோக்கி...:  மேலும் மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணி கட்சியான தேவேந்திரகுல மக்கள் சங்கம் சார்பில் வேட்பாளர் சிவசங்கரி, நாம் தமிழர் கட்சியில் சண்முகப்பிரியா களம் கண்டபோதும், திமுக, அதிமுக, அமமுக ஆகிய மும்முனைப்போட்டியே நிலவுகிறது.  நான்கு முறை அதிமுகவிற்கு ஓட்டு போட்டு என்ன கண்டோம் என கடும்கோபத்தில் இருக்கும் மக்கள் இந்தமுறை மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

அதிமுகவில் வாய்ப்பு கேட்டு கிடைக்காத பலரது அதிருப்தி,  பிரசாரத்தில் கூட்டணி கட்சிகளை அழைப்பதில்லை உள்ளிட்ட குமுறல்கள், அதிமுக வேட்பாளருக்கு எதிராக உள்ளன. தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் எப்படி ஓட்டு கேட்டு பிரச்சாரத்திற்கு செல்வது என ஆளுங்கட்சி தொண்டர்களின் புலம்பல்களும் இருக்கின்றன.

மானாமதுரை தொகுதியில் ஆதிதிராவிடர்கள் கணிசமாக உள்ளனர். அதேபோல இளையான்குடி, திருப்புவனம் புதூர் பகுதிகளில் சிறுபான்மையினர் ஆதரவும் திமுக வெற்றியை உறுதி செய்து வருகிறது. இத்தேர்தலில் திமுகவிற்கு  கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி  பலமிருப்பதும் வெற்றிக்கான வாசலைத் திறந்து வைத்துள்ளது.

அதிமுகவுக்கு வாக்களிக்க கிராம கூட்டங்களில் எதிர்ப்பு

மானாமதுரையில் இந்த முறை அதிமுகவினருக்கு வாக்களிக்க கூடாது என பல கிராமங்களில் கூட்டம் போட்டு முடிவு செய்துள்ளனர். திமுக ஆட்சியின்போது ரூ.950 கோடியில் இரண்டாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தனியார் நிறுவன தொழிற்சாலை மானாமதுரை சிப்காட்டில் அமைக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பின் அந்த ஆலையை இயங்க வைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆலை துவங்கிய 2 ஆண்டுகளில் மூடப்பட்டு கிடக்கிறது. இது தவிர சிப்காட்டில் அட்டைப்பெட்டி, பைபர், பிளாஸ்டிக் பைப் ஆலைகள் என 13 ஆலைகளும் மூடுவிழா கண்டது. மானாமதுரை அருகே ராஜகம்பீரம், முத்தனேந்தல் பகுதியில் இருந்த நூற்பாலைகள் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள நிலையில் இங்குள்ள பெண்கள், இளைஞர்கள் சிவகங்கை அருகே உள்ள தனியார் நூற்பாலைகளுக்கு தினமும் பஸ்களில் சென்று வருகின்றனர்.

Tags : Magudada Sube ,Dimu , The main constituency of Sivagangai district is the proud Manamadurai assembly constituency of Ramanathapuram, Madurai, Virudhunagar
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து