×

முதல்வர்களை தந்த முக்கிய தொகுதியில் மீண்டும் ஒரு ‘சகோதர யுத்தம்’-தொகுதி ரவுண்ட் அப்

*ஆண்டிபட்டியை அள்ளுகிறார் அண்ணன்

*அதிருப்தியாளர்கள் உள்ளடி வேலையால் அதிமுகவுக்கு சிக்கல்

ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தேனி மாவட்டத்தின் நுழைவிடத்தில் துவங்கும் முக்கிய தொகுதியாக உள்ளது. இங்கு ஆண்டிபட்டி, காமயகவுண்டன்பட்டி, ஹைவேஸ் என பேருராட்சிகளும், ஆண்டிபட்டி, கடமலை-மயிலை, கம்பம் உள்ளிட்ட ஊராட்சிகளும் உள்ளன. ஆண்டிபட்டி தொகுதி இரண்டு முதலமைச்சர்களை தேர்தெடுத்த தொகுதி பெருமை கொண்டிருக்கிறது.

முதல்வர்களின் தொகுதி...: ஆண்டிபட்டி தொகுதியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 1984 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா ஆண்டிபட்டியில் இருந்து இருமுறை சட்டபேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தொகுதியில் 5 மாவட்ட மக்களின் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக இருக்கக் கூடிய வைகை அணை அமைந்துள்ளது. சின்னசுருளி அருவி, மேகமலை, என சுற்றுலா முக்கியத்துவம் மிகுந்த தொகுதியாகவும் இருக்கிறது.

ஆண்டிபட்டி தொகுதியில் முக்குலத்தோர் சமுதாயம் மற்றும் நாயக்கர், நாயுடு, ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளனர். கவுண்டர், நெசவாளர், பிள்ளைமார், ஆசாரி சமூகத்தினர் அடுத்தடுத்த நிலையில் உள்ளனர். மொத்தம் 2 லட்சத்து 75 ஆயிரத்து 931 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 257 பேர் ஆண்கள், 1 லட்சத்து 39 ஆயிரத்து 540 பேர் பெண்கள் 34 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.

விவசாயமே பிரதானம்...:  தொகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. திரும்பும் திசை எல்லாம் வேளாண் நிலங்களே இருக்கின்றன. முருங்கை, தக்காளி, வாழை, கத்தரி, வெண்டை உள்ளிட்ட பல்வேறு பாசனமும், மானாவாரி விவசாயமும் நடந்து வருகிறது. பூக்களும் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.

விவசாயத்திற்கு அடுத்தப்படியாக நெசவு தொழில் சிறந்து விளங்கி வருகிறது. இங்கு சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், கொப்பையம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட நெசவாளர்கள் நெசவு தொழில் செய்து வருகின்றனர். இங்கு உயர்ரக காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப்படுவதால் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு சந்தைப்படுத்துவதற்காக அனுப்பப்படுகிறது.

நீண்ட நாள் கோரிக்கைகள்...:  ஆண்டிபட்டியில் உயர்தொழில்நுட்ப நெசவுப் பூங்கா, மூலவைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் திட்டம், வைகை அணையை தூர்வாரும் திட்டம், குள்ளப்பகவுண்டன்பட்டி அருகே முல்லைப் பெரியாற்றிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள கண்மாய், குளங்களை நிரப்பி நீராதாரத்தை பெருக்கும் திட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சியை நகராட்சியாக மாற்றும் திட்டம், ஆண்டிபட்டி, புறவழிச்சாலை திட்டம், தேனி மதுரை மாவட்டங்களை இணைக்கும் மயிலாடும்பாறை - மல்லப்புரம் சாலை திட்டம், விருதுநகர் - தேனி மாவட்டங்களை இணைக்கும் கிழவன் கோவில் சாலை திட்டம் ஆகியன நீண்ட நாள்கள் கோரிக்கைகளாக உள்ளன.

திமுக வசம் வந்தது...:   ஆண்டிபட்டி தொகுதியில் கடந்த 2019ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் மகாராஜன், அதிமுக சார்பில் லோகிராஜன் போட்டியிட்டனர். இருவரும் உடன் பிறந்த அண்ணன் - தம்பி ஆவர். இதில் மகாராஜன் வெற்றி பெற்றார். கடந்த 20 ஆண்டுகளாக ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வசம் இருந்து கடந்த இடைத்தேர்தலில் திமுக வசம் வந்தது. சிட்டிங் எம்எல்ஏ மகாராஜன் தொகுதி மக்களின் தேவைகளான தண்ணீர் பிரச்னையை கையில் எடுத்து சட்டப்பேரவை கூட்டத்தில் பேசி பிரச்னையை சரி செய்தார். இதனால் தொகுதியில் நல்ல பெயர் உள்ளது. ெதாகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தந்துள்ளார்.

உள்குத்து நடக்குது...:  அதன்பிறகு அதிமுக லோகிராஜன் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று, ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய குழு தலைவரானார். ஆனால் இந்த பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் வேறு சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கலாம் என அதிமுக தலைமை முடிவெடுத்திருந்தது. அதில் அதிமுக மாவட்ட துணை செயலாளர் முருக்கோடை ராமர் மற்றும் ஆண்டிபட்டி ஒன்றிய குழு துணைத்தலைவர் வரதராஜன் என இருவரில் ஒருவர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இடைத்தேர்தலில் தோல்வியடைந்த லோகிராஜன், இந்தமுறையும் தனக்கு சீட் வேண்டும் என்று கட்சி தலைமையிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஓபிஎஸ் தயவில்...: உளவுத்துறை லோகிராஜனுக்கு ஆண்டிபட்டியில் செல்வாக்கு இல்லை என்றதால், மீண்டும் சீட் தர தலைமை மறுத்தது. ஓபிஎஸ் உதவியால் மீண்டும் லோகிராஜனுக்கே சீட் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சீட் கிடைக்காதவர்கள் உள்ளடி வேலை பார்க்க தயாராக உள்ளனர். திமுக தரப்பில் சிட்டிங் எம்எல்ஏவான இவரது அண்ணன் மகாராஜனே மீண்டும் போட்டியிடுகிறார். தொகுதியில் கடந்த காலங்களில் மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத அதிமுக அரசின் மீது அதிருப்தி அதிகரித்துள்ளது.  

அமமுக பிரிக்கும்...: இதுதவிர, அமமுக சார்பில் கடந்த இடைத்தேர்தலில் ஜெயக்குமார்  போட்டியிட்டார். அதில் 28,313 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தார். இதனால் அதிமுகவின் வாக்குகள் பெரிதளவில் பிரிந்தது. இதேபோல் இந்த பொதுத்தேர்தலிலும் ஜெயக்குமார் வேட்பாளராக இருப்பதால், இம்முறையும் அதிமுக வாக்குகள் பிரியும் நிலை இருக்கிறது. மேலும், அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக தற்போது அமமுக கூட்டணிக்கு சென்றிருப்பதும் அதிமுகவிற்கான வாக்குகளை குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் சார்பில் குணசேகரன், நாம் தமிழர் சார்பில் மற்றொரு ஜெயகுமார் உள்ளிட்ட கட்சிகள், சுயேட்சைகள் என 20 பேர் களத்தில் இருந்தபோதும், திமுக, அதிமுக, அமமுக இடையேயான மும்முனைப் போட்டியே நிலவுகிறது. அதிமுக மீதான அதிருப்தியுடன், வாக்குகள் பிரிப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள், கூட்டணி பலம் என திமுகவே வெற்றிவெளிச்சத்தை தொட்டு நிற்கிறது.

Tags : Principals , Andipatti Assembly constituency is the main constituency which starts at the entrance of Theni district. Here is Andipatti, Kamayakaguntanpatti,
× RELATED தேர்தல் நேரத்தில் 2 முதல்வர்கள் சிறை,...