×

12வது வார்டு பகுதியில் 3 ஆண்டுகளாக குடிநீர் பிரச்னை நாகை நகராட்சி அலுவலகத்தை காலிகுடங்களுடன் முற்றுகை-பெண்கள் போராட்டம்

நாகை : நாகையில் கடந்த 3 ஆண்டு காலமாக குடிநீர் இல்லாத காரணத்தால் ஆத்திரமடைந்த பெண்கள் நேற்று காலிகுடங்களுடன் நாகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.நாகை நகராட்சி 12 வது வார்டிற்கு உட்பட்ட கடம்பாடி, என்ஜிஓ காலனி, மாரியம்மன் கோவில்தெரு ஆகிய பகுதிகளில் இருந்து நேற்று 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் நாகை நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.

நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இவர்களுடன் அந்த பகுதியைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டதால் நகராட்சி அலுவலகம் உள்ளே யாரும் செல்ல முடியவில்லை. அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியே வரவும் முடியிவல்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த நகராட்சி பொறியாளர் வசந்தன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அந்த பகுதி பொதுமக்கள் கூறியது: நாகை நகராட்சி வார்டு எண் 12க்கு உட்பட்ட இந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்த பகுதிகளில் சீரான முறையில் குடிநீர் வந்து 3 ஆண்டுகள் கடந்து விட்டது. இதனால் எங்கள் பகுதியில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதிக்கு சென்று பெண்கள் குடிநீர் எடுத்து வரவேண்டிய அவலம் உள்ளது.

சில நேரங்களில் அங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் எங்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைப்பது இல்லை. இந்நிலையில் கடந்த 1 ஆண்டு காலமாக குடிநீர் வருவது முற்றிலுமாக தடைபட்டு விட்டது.இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்து பயன் இல்லை. இதனால் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு செய்தோம்.

இதை அறிந்து தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உரிய தீர்வு காணப்படும் என்று கூறினர். ஆனால் இதுநாள் வரை கடம்பாடி என்ஜிஓ காலனி, மாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வரவே இல்லை. முற்றுகை போராட்டம் நடத்துவதால் பேச்சுவார்த்தை நடத்த வந்துள்ளது சரியில்லை.

முதலில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறி நாகை நகராட்சி நிர்வாகத்தையும், ஆணையரையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்த வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தேர்தல் காலமாக இருப்பதால் போராட்டம் நடத்தக்கூடாது என கூறி, விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். சுமார் 30 நிமிடம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் சமாதானம் அடைந்த பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : 12th ward ,Naga , Nagai: Women in Nagai were angry over the lack of drinking water in Nagai for the last 3 years
× RELATED காதல் ரகசியத்தை உடைத்த நாக சைதன்யா, சோபிதா