பேய்க்குளம் நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடாக பணம் வசூல்-5கிராம விவசாயிகள் தேர்தல் புறக்கணிப்பு

சாத்தான்குளம் : பேய்க்குளம் நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் முறைகேடாக பண வசூல் செய்வதாக புகார் தெரிவித்து அவர்கள் மீது நடவடிக்கை கோரி பேய்க்குளம் பகுதியில் 5 கிராம விவசாயிகள் தேர்தலை புறக்கணிப்பதாக வீடுகளில் கறுப்பு ஏற்றியுள்ளனர்.

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தில் நெல்கொள்முதல்  நிலையம் திறக்கப்பட்டு அப்பகுதி விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கொள்முதல் நிலையத்தில் எடுக்கப்படும் நெல்லை அரிசியாக்கி  ரேசன் கடைக்கு அரிசி கொண்டு செல்லும் வகையில் 40 கிலோ எடை கொண்ட அரிசி பை உருவாக்கப்படுகிறது.

இதில் அதற்கென தரம் பிரித்து நெல் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. இதில் இந்த 40கிலோ அரிசி பைக்கு நெல் எடுக்க விவசாயிகளிடம் ரூ.45 முதல் 60 வரை பணம் வசூல் செய்யப்படுவதாக விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வீடியோ ஆதாரங்களை பதிவு செய்து மாவட்ட கலெக்டரிடம் நேரிடையாக புகார் தெரிவித்தும் அதிகாரிகள் யாரும் நெல் கொள்முதல் நிலைய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென கூறப்படுகிறது.

இதனால் கொள்முதல் நிலையத்தில் முறையாக உரிய விலைக்கு நெல் கொள்முதல் செய்யவும், பணம் வசூல் செய்யும் ஊழியர் மீது நடவடிக்கை கோரியும் பேய்க்குளம் மற்றும் வைகுண்டம் தாலுகாவுக்குட்பட்ட வல்லகுளம், மணலிவிளை, உதயனேரி, மல்லல், புதுக்குளம், சிராக்குளம் ஆகிய கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள்  வீடு மற்றும் தெருக்களில் கறுப்பு கொடி ஏந்தி தேர்தலை புறக்கணிப்பதாக வீட்டு முன் தட்டிபோர்டு வைத்துள்ளனர். இது குறித்த தகவலை அடுத்து வைகுண்டம் தொகுதி பறக்கும் படையைச் சேர்ந்த துணை தாசில்தார் சுல்தான்சலாவூதின் தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து மாவட்ட கடலை விவசாயிகள் சங்க தலைவர் முருகேசன் கூறுகையில், ‘நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் முறைகேடாக பணம் வசூல் செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளேன். இதுவரை இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே பணம் வசூல் செய்யும் ஊழியர் மற்றும் அதற்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’  எனகோரி சட்ட மன்ற தேர்தலை புறக்கணித்துள்ளோம்’ என்றார்.

Related Stories:

>