×

சித்தூர் கொண்டமிட்டா பகுதியில் கழிவுநீர் கால்வாய் மீது சிமென்ட் சிலாப் அமைக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

சித்தூர் : சித்தூர் கொண்டமிட்டா பகுதியில் கழிவுநீர் கால்வாய் மீது சிமென்ட் சிலாப் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சித்தூர் மாநகரத்தில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால், கடந்த 2016ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மேயர் கட்டாரி ஹேமலதா தலைமையில் சித்தூர் மாநகரத்தில் உள்ள முக்கிய சாலைகளை அகலப்படுத்த மாநகராட்சி கூட்டத்தொடரில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, எம்.எஸ்.ஆர் சர்க்கிளில் இருந்து புதிய கலெக்டர் அலுவலகம் வரையும், எம்.எஸ்.ஆர் சர்க்கிளில் இருந்து இருவாரம் பகுதி வரையும், எம்.எஸ்.ஆர் சர்க்கிளில் இருந்து கட்ட மச்சி வரையும், காந்தி சிலை அருகே இருந்து தானா செக்போஸ்ட் வரை சாலையில் இருபுறமும் அகலப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முதற்கட்டமாக எம்.எஸ்.ஆர் சர்க்கிளில் இருந்து புதிய கலெக்டர் அலுவலகம் வரை இருபுறமும் உள்ள வீடுகளை மாநகராட்சி துறை அதிகாரிகள் கணக்கெடுத்து அகற்ற உத்தரவிட்டனர். அதற்காக வீட்டின் உரிமையாளர்களிடம் நோட்டீசும் வழங்கினர்.

இதனால், வீட்டின் உரிமையாளர்கள் மாநகராட்சி அதிகாரிகள் அறிவிப்பின்படி தங்களின் வீட்டை இடித்தனர். ஆனால், எதிர்க்கட்சிகள் வீட்டின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கிய பின்னர் சாலையை அகலப்படுத்தும் பணியை தொடங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சாலை அகலப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பணிகள் பாதியில் நிறுத்தியதால் கழிவுநீர் கால்வாய் சிமென்ட் சிலாப் அமைக்கப்படவில்லை. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், கொசுக்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அலுவலகத்தில் அப்பகுதிமக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், ‘தற்போது பணிகள் நிறுத்தப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதுவரை கழிவுநீர் கால்வாய் சிமென்ட் சிலாப்கள் அமைக்கப்படவில்லை. இதனால், மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய் மீது சிமென்ட் சிலாப் அமைத்து தர வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chittoor Kondamita , Chittoor: The public has demanded the construction of a cement silo on the sewer canal in the Kondamitta area of Chittoor.
× RELATED பாலக்காடு பகவதி அம்மன் கோயில் பூரம் திருவிழா