விசாகப்பட்டினம் எக்கு தொழிற்சாலை தனியார் மயமாக்கலை கண்டித்து சித்தூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம்

* பஸ்கள் நிறுத்தம் * பொதுமக்கள் பாதிப்பு

சித்தூர் : மத்திய பாஜவை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் ஒரு நாள் பாரத் பந்த் நடத்த தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து, சித்தூர் மாநகரத்தில் பந்த் நடந்தது. இதனால், சித்தூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. ஆட்டோக்கள் மட்டும் செயல்பட்டது.

இதனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தொழிலாளர் சங்கத்தினர் ஆட்டோ ஓட்டுனர்கள் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஆட்டோக்களை இயக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், சர்ச் தெரு, பஜார் தெரு, ஹை ரோடு, காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டது.  இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜ் பேசுகையில், ‘மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசுக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களையும் தனியாருக்கு தாரைவார்த்து வருகிறார்.

விவசாயிகளுக்கு எதிராக 3 வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார். இதனால், விவசாயிகள் மற்றும் எதிர்கட்சிகள் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வற்புறுத்ததினர். ஆனால், வாபஸ் பெறவில்லை. இதனால், டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு நாள் பாரத் பந்த் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, நேற்று நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக பாரத் பந்த் நடந்தது.

அதேபோல், ஆந்திராவில் மத்திய அரசுக்கு சொந்தமான எஃகு தொழிற்சாலையை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தெரிவித்தார். மக்களுக்கு சொந்தமான எஃகு தொழிற்சாலையை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என 39 தொழிலாளர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். சொந்தமான எஃகு தொழிற்சாலையை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.  இதில், கம்யூனிஸ்ட் கட்சி நகர தலைவர் கோபி, துணை தலைவர் மணி, செயலாளர் கிட்டு பாய், பொருளாளர் ரமாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பதி: மத்திய அரசை கண்டித்து திருப்பதி பஸ் நிலையம் அருகே தெலுங்கு தேசம், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பதி பஸ் நிலையம் அருகில் மாணவர்கள் சங்கத்தினர் தரையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தினர். அதேபோல், திருமலை- திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகம் அருகே சிஐடியு தொழிற்சங்கத்தினர் மொட்டையடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: