×

ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் அதிகரிக்கும் தனிநபர் ஆக்கிரமிப்புகள்

* கட்டிட கழிவு, பிளாஸ்டிக் பொருட்கள் குவிப்பால் தண்ணீர் தேடி அலையும் விலங்குகள்

* நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

அணைக்கட்டு : ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் தனிநபர் ஆக்கிரமிப்புகளால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி காட்டை விட்டு வெளியேறும் அவலம் உள்ளது.வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவுக்குட்பட்ட ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதியில் ஒடுகத்தூர் வன துறை கட்டுபாட்டில் பருவமலை காப்பு காடு, ராசி மலை காப்புகாடு,  கருத்துமலை காப்பு காடு உள்ளிட்ட காடுகள் உள்ளன. இந்த காட்டில் புள்ளிமான்கள், கிரீபிள்ளைகள், பாம்புகள் உள்ளிட்ட பல வகையான வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளது.

இந்த காடுகளை ஒட்டியுள்ள பகுதியில் விவசாய நிலம் வைத்திருக்கும் தனிநபர்கள் சிலர் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை ஆக்கிரமித்து பாதை வசதி ஏற்படுத்தி கொண்டும், விவசாயம் செய்தும் வருகின்றனர். இவர்கள் சுய நலத்திற்காக பாதை அமைத்து காட்டை அழித்து வருவதால் அந்த காட்டில் வளரும் வன விலங்குகள் தண்ணீர் தேடி அலையும்போது திசை தெரியாமல் ஊருக்குள் வந்துவிடுகிறது.

அப்போது நாய்கள் மற்றும் வேட்டையடுபவர்களிடம் மாட்டி உயிரிழக்கின்றது. சில சமயங்களில் மக்களே பிடித்து வன அலுவலர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். இதில் வண்ணாதாங்கள் பகுதியில் கருத்தமலை காப்பு காட்டில் உள்ள இடத்தினை அந்த பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் அவரின் நிலத்திற்கு செல்வதற்காக  வனதுறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தினை ஆக்கிரமித்து ஜேசிபி மூலம் சமன் செய்து பாதை அமைத்துள்ளார்.

அந்த வழியாக ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஒட்டி செல்பவர்களை, இங்கு வர கூடாது, எங்கள் இடம் என கூறி தகராறு செய்து வருகிறாராம். மேலும் அருகே மற்ற விவசாய நிலங்களுக்கு செல்பவர்களை செல்லவிடாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறாராம். இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறை அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்நிலையில் நேற்று காட்டை ஆக்கிரமித்திருந்த அந்த தனிநபர் மற்றும் அவருடன் சிலர் வீட்டு கட்டுமான கழிவுகளான உடைந்த செங்கற்கள் மற்றும் பிளாஸ்டிகள் கழிவுகளை டிராக்டர்கள் மூலம் எடுத்து வந்து காட்டில் கொட்டியுள்ளனர். இந்த சத்தத்தால் காட்டில் இருந்த பறவைகள், வனவலிங்குகள், மாடுகள் பயந்து ஒடியுள்ளது.

இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அந்த ஆக்கிரமிப்பு தாரர்களிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் உங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள் என கூறி கொட்டி விட்டு சென்றுள்ளனர். இதே போல் ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதியில் வனத்துறை கட்டுபாட்டில் உள்ள காட்டை அழித்து விவசாயம் செய்தும், பாதை போட்டும் பலர் ஆக்கிரமித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே சம்மந்தபட்ட வனத்துறை அதிகாரிகள் தனி நபர் ஆக்கிரமித்துள்ள இடத்தினை மீட்டு, அதில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றி வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நிரப்பப்படாத வனவலிங்கு தாகம் தீர்க்கும் தண்ணீர் தொட்டிகள்

அணைக்கட்டு தாலுகாவுக்குட்பட்டு ஒடுகத்தூர் வன சரக கட்டுபாட்டிலும், வேலூர் வன சரக கட்டுபாட்டிலும் உள்ள காட்டு பகுயில் வனவிலங்குகள் தாகம் தீர்க்கும் தண்ணீர் தொட்டிகள் உள்ளன. கடுமையான வெயில் போன்ற வறட்சி காலத்தில் வனதுறையினர் அந்த தொட்டில் தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்ப வேண்டும். ஆனால் பல தொட்டிகள் தண்ணீர் நிரப்பாமல் வறண்டு கிடக்கிறது. அப்படியே நிரப்பினாலும் தண்ணீர் காலியானதும் மீண்டும் தொடர்ச்சியாக நிரப்புவது இல்லை. இதனால் காட்டில் வசிக்கும் விலங்குகள் நீரின்றி தவித்து வருகிறது.

Tags : Odugathur , Dam: Wildlife seeks water from individual encroachments in forest controlled areas around Odugathur
× RELATED குடும்ப பிரச்னையால் பெண்...