×

மயிலாடுதுறை, சீர்காழி, காரைக்கால் பகுதிகளில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு : வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி!!

மயிலாடுதுறை : மயிலாடுதுறை, சீர்காழி, காரைக்கால் பகுதிகளில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் பகுதியில் விமானம் தாழ்வாக பறந்த போது சத்தம் கேட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மயிலாடுதுறை நகரில் இன்று காலை 8.25 மணியளவில் வெடி வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டது. இந்த சத்தத்தை கேட்டு வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

ரயில்வே பாலத்துக்கு கீழே நின்று கொண்டிருந்தவர்கள் என்னவோ, ஏதோ என நினைத்து தலை தெறிக்க ஓட்டம் பிடித்தனர். சில இடங்களில் வீடுகளின் ஓடுகள் கூட சரிந்து விழுந்தது. சில வீடுகளில் அதிர்வு ஏற்பட்டுள்ளது. நில நடுக்கம் வந்து விட்டதோ என மக்கள் பேசிக்கொண்டனர். மேலும் மயிலாதுறையில் இருந்து சுமார் 20 கிமீ சுற்றளவுக்கு இந்த சத்தம் கேட்டுள்ளது.

சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார், கொள்ளிடம் , காரைக்கால் பகுதியிலும் வெடிச்சத்தமும் நில அதிர்வும் உணரப்பட்டுள்ளதாக மக்கள் கூறியுள்ளனர். வெடிச்சத்தம் ஏற்பட ராணுவ விமானமே காரணம் என மாவட்ட ஆட்சியர் பிரான்சுவா கூறியுள்ளார்.

அதே சமயம் சத்தம் கேட்ட நேரத்தில் வானில் ஒரு ஜெட் விமானம் பறந்துள்ளது.தஞ்சையில் விமானப்படை தளம் உள்ளது. இங்கிருந்து ஜெட் விமானங்கள் அடிக்கடி பயிற்சிக்கு புறப்பட்டு செல்லும். வானில் ஜெட் விமானங்கள் பறக்கும் போது ஏர் லாக் எடுப்பது வழக்கம். அப்போது சத்தம் அதிகளவில் உருவாகும். விமானம் சற்று தாழ்வாக பறந்ததால், மக்களுக்கு அதிகளவில் சத்தம் கேட்டுள்ளது என விமானப்படை தளம் தரப்பில் கூறப்பட்டது.


Tags : Mayiladuthurai ,Sirkazhi ,Karaikal , Mayiladuthurai, Sirkazhi, Karaikal
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...