ஆதார் விவரங்கள் தனியாருக்கு அளிக்கப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டுகள் தவறானவை : ஆதார் ஆணையம் விளக்கம்

டெல்லி : ஆதார் விவரங்கள் தனியாருக்கு அளிக்கப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டுகள் தவறானவை என்று ஆதார் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

பெங்களூரு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) துணைத் தலைமை இயக்குநர் திரு ஆர் எஸ் கோபாலன், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் (நிதி மற்றும் பிற மானியங்கள், நன்மைகள் மற்றும் சேவைகள்) சட்டம் 2016 (”ஆதார் சட்டம்”)இன் விதிகளின் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டரீதியான அதிகார அமைப்பு ஆகும்.   இந்த சட்டத்தின் 3-வது பிரிவின்படி, வாழுநர் (Resident) வழங்கும் டெமொக்ராபிக் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை சரிபார்த்து சேகரித்து இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் ”ஆதார்” என்ற 12 இலக்க தனிப்பட்ட அடையாளத்தை வழங்குவது இந்த அமைப்பின் பணியாகும்.

ஆதாரின் நோக்கம் சரிபார்க்கக்கூடிய அடையாளத்தை வழங்குவதாகும், இது திறமையான, வெளிப்படையான, நல்லாட்சிக்கும், மானிய சலுகைகள் மற்றும் சேவைகளுக்கும் பயன்படுகிறது.ஆதார் சட்டத்தில் உள்ளபடியும் மற்றும் மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படியும் அடையாளத் தகவல் மற்றும் தனிநபர்களின் அங்கீகார பதிவுகளின் பாதுகாப்பை UIDAI உறுதி செய்கிறது. UIDAIஆல் சேகரிக்கப்பட்ட தகவல்கள், ஆதார் எண்கள் அங்கீகாரத்தைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்தப்பட மாட்டாது.

அடையாளத் தகவல் அல்லது அங்கீகாரப் பதிவுகள் உட்பட எந்தவொரு தகவலையும் (முக்கியமான பயோமெட்ரிக் தகவல்களைத் தவிர) உயர்நீதிமன்றத்தின் நீதிபதியின் உத்தரவின்படி மட்டுமே வெளியிட முடியும்.  மேலும், இது UIDAI மற்றும் சம்பந்தப்பட்ட ஆதார் எண் வைத்திருப்பவர் ஆகியோருக்கு, சட்டத்தின் பிரிவு 31-ன்படி விசாரணைக்கான வாய்ப்பை வழங்கிய பிறகு மட்டுமே வெளியிட முடியும்.

UIDAI தனது அங்கீகரிக்கப்பட்ட பயனீட்டு நிறுவனங்களைத் தவிர வேறு எந்த நிறுவனத்துடனும் எந்த தரவையும் பகிரவில்லை. மேலும், பயனீட்டு நிறுவனங்கள், வாழுநர்களின் ஆதார் விவரங்கள் பற்றிய எந்த தகவலையும் சேமிப்பதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் கண்டிப்பான தடை விதிக்கப்பட்டுள்ளது.

”ஆதார் சட்டத்தில் உள்ள தகவல்களைத் தவிர வேறு நோக்கங்களுக்காக UIDAI வாழுநர்களின் விவரங்களை மொத்தமாக பகிர்ந்து கொண்டுள்ளது” என்ற சமீபத்திய குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை. UIDAI எப்போதும் வாழுநர்களின் தனியுரிமையை பாதுகாப்பதில் மிகவும் உறுதியாக உள்ளது.

எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: