ஓட்டுநர் உரிமம், பர்மிட் புதுப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு: மத்திய போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி : ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட போக்குவரத்து ஆவணங்களை புதுப்பிக்கும் அவகாசத்தை வரும் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து அரசு அலுவலக பணிகளும் முடங்கின. இதன்காரணமாக, பிப்ரவரி 2020 முதல் காலாவதியான வாகன ஓட்டுநர் உரிமம், பல்வேறு வாகனங்களின் ஆர்.சி., பர்மிட், தகுதிச் சான்று ஆகியவற்றை புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, காலாவதியான இந்த ஆவணங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு செல்லுபடியாகும் என மத்திய அரசு அறிவித்தது. பின்னர் அவ்வப்போது இந்த சலுகை நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக மார்ச் 31 வரை ஆவணங்கள் செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த சலுகையை 2021 ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அமைச்சகம் அறிவிக்கை அனுப்பியுள்ளது. அதில், ‘கடந்த பிப்ரவரி முதல் காலாவதியான ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்கள் 2021 ஜூன் 30 வரை செல்லத்தக்கதாக கருதப்படும்’ என கூறப்பட்டுள்ளது. கொரோனா  பெருந்தொற்று சூழல் இன்னும் முழுமையாக நீங்காததால், இதை கருத்தில் கொண்டு இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Related Stories:

>