×

அசாம், மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம் : மாஸ்க், கையுறை அணிந்தபடி ஜனநாயக கடமையாற்றும் வாக்காளர்கள்!!

புதுடெல்லி: கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள், பலத்த பாதுகாப்புடன் அசாம், மேற்கு வங்கத்தில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில், 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாகவும், 126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. மற்ற மூன்று மாநிலங்களிலும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாக  5 மாவட்டங்களில் இருக்கும் 30 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.  பஸ்சிம் மிட்னாபூர் பிரிவு-1, புர்பா மிட்னாபூர் பிரிவு -1, பன்குரா, ஜர்கிராம் மற்றும் புருலியா ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் பாதுகாப்புடன் வாக்களிக்கப்பதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மேலும், இம்மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால், பாதுகாப்புக்கு துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இம்மாநிலத்தில் ஏப்ரல் 1ம் தேதி 2ம் கட்ட தேர்தலும், ஏப்ரல் 6, ஏப்ரல் 10, ஏப்ரல் 17, ஏப்ரல் 22, ஏப்ரல் 26 மற்றும் ஏப்ரல் 29ம் தேதிகளில் அடுத்த 6 கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.

இதேபோல், 126 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில், 12 மாவட்டங்களில் உள்ள 47 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான களத்தில் 264 வேட்பாளர்கள் உள்ளனர். மொத்தம் 81 லட்சம் மக்கள் வாக்களிக்க உள்ளனர். இம்மாநிலத்தில் 2ம் கட்டமாக 39 தொகுதிகளுக்கு ஏப்ரல் 1ம் தேதியும், 3ம் கட்டமாக 40 தொகுதிகளில் ஏப்ரல் 6ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.கொரோனா பரவலை தடுக்க வாக்காளர்கள் மாஸ்க், ஒரு கையில் கையுறை அணிந்தபடி வாக்களித்து வருகின்றனர். கொரோனா பாதித்தவர்கள் கடைசி நேரத்தில் வாக்களிக்க ஏதுவாக ஒரு மணி நேரம் வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


Tags : Asam ,West Bank , Assam, West Bengal, Voting
× RELATED மேட்டூர் அணையில் இருந்து குடிநீர்...