×

வேளாண் சட்டங்களை எதிர்த்து நடத்தப்பட்ட விவசாயிகள் பந்த்தால் ரயில் சேவை பாதிப்பு: பஞ்சாப், அரியானாவில் மறியல்

புதுடெல்லி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் நேற்று நடத்திய நாடு தழுவிய பந்த்தினால், பஞ்சாப், அரியானாவில் ரயில் சேவை பாதித்தது. மத்திய அரசின் சர்ச்சைக்குரிய 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, டெல்லி எல்லையில் உள்ள சிங்கு, காஜிப்பூர் மற்றும் திக்ரியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டம் தொடங்கப்பட்டு நேற்றுடன் 4 மாதங்கள் முடிந்தது. இதை முன்னிட்டு, நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி நாடு தழுவிய அளவில்  பந்த் நடத்த விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில், அறிவிக்கப்பட்டபடி நாடு முழுவதும் விவசாயிகள் நேற்று பந்த் நடத்தினர்.

இதில், விவசாய சங்கங்கள், வர்த்தக சங்கங்கள் போன்றவை கலந்து கொண்டன. தமிழகம் உட்பட சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் மட்டும் பந்த் நடத்தப்படவில்லை. இவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டன. பஞ்சாப், அரியானாவில் 44 இடங்களில் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து வடக்கு ரயில்வே செய்தி தொடர்பாளர் தீபக் குமார் கூறுகையில், “ விவசாயிகள் நடத்திய மறியலால், 35 பயணிகள் ரயில்கள், 40 சரக்கு ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது,” என்றார். இந்த பந்த்தினால் மற்ற மாநிலங்களில் பெரியளவில் பாதிப்புகளோ, அசம்பாவிதங்களோ நடக்கவில்லை.

Tags : Stir ,Punjab, Haryana , The first Test match between West Indies and Sri Lanka was drawn
× RELATED சுற்றுலா வாகனத்தை தாக்கிய காட்டு மாடு: கொடைக்கானலில் பரபரப்பு