பேர்ஸ்டோ-ஸ்டோக்ஸ் அதிரடியில் இங்கிலாந்து அபார வெற்றி

புனே: இந்திய அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், பேர்ஸ்டோ - ஸ்டோக்ஸ் ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அபாரமாக வென்றது. மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசியது. அந்த அணியில் பில்லிங்ஸ், வுட், மோர்கனுக்கு பதிலாக மாலன், லிவிங்ஸ்டோன், டாப்லி இடம் பெற்றனர். இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக பன்ட் இடம் பெற்றார். ரோகித், தவான் இருவரும் இந்திய இன்னிங்சை தொடங்கினர். தவான் 4 ரன், ரோகித் 25 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். கேப்டன் கோஹ்லி - கே.எல்.ராகுல் இணைந்து 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 121 ரன் சேர்த்தனர். கோஹ்லி 66 ரன் (79 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரஷித் சுழலில் பட்லர் வசம் பிடிபட்டார். அடுத்து ராகுலுடன் இணைந்த பன்ட் இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்து 28 பந்தில் அரை சதம் அடித்தார். மறு முனையில் ராகுல் சதம் விளாசினார்.

ராகுல் - பன்ட் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 113 ரன் சேர்த்தது. ராகுல் 108 ரன் (114 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), பன்ட் 77 ரன் (40 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்டியா தன் பங்குக்கு 16 பந்தில் 35 ரன் (1 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். இந்தியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன் குவித்தது. க்ருணல் 12, தாகூர் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ராய் - பேர்ஸ்டோ ஜோடி 16.3 ஓவரில் 110 ரன் சேர்த்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தது. ராய் 55 ரன் (52 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ரன் அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு இணைந்த பேர்ஸ்டோ - ஸ்டோக்ஸ், இந்திய பந்துவீச்சை தவிடுபொடியாக்கி 175 ரன் சேர்த்து மிரட்டினர். ஸ்டோக்ஸ் 99 ரன் (52 பந்து, 4 பவுண்டரி, 10 சிக்சர்), பேர்ஸ்டோ 124 ரன் (112 பந்து, 11 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி வெளியேறினர். கேப்டன் பட்லர் டக் அவுட்டானார். இங்கிலாந்து 43.3 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 337 ரன் எடுத்து வென்றது. மாலன் 16, லிவிங்ஸ்டோன் 27 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி போட்டி நாளை நடக்கிறது.

3வது வீரராக 10,000

விராத் இதுவரை 253 ஒருநாள் போட்டிகளில் (244 இன்னிங்ஸ்) 12,162 ரன்  குவித்துள்ளார். அதில் 190 இன்னிங்சில்  3வது வீரராகக் களம் இறங்கி 10 ஆயிரம் ரன் குவித்த சாதனையை நேற்று படைத்தார்.தனது 62வது அரை சதத்தை பதிவு செய்த அவர் கடந்த  4 போட்டிகளில் 98, 63, 56, 66 ரன்  எடுத்துள்ளார். தொடர்ந்து 4 அல்லது அதற்கு மேற்பட்ட  இன்னிங்சில் 7வது முறையாக அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

* ராகுல்  தனது 5வது சதத்தையும், ரிஷப் தனது 2 அரை சதத்தையும் அடித்தனர். கோஹ்லி கடைசியாக 2019, நவம்பரில்  வங்கதேசத்திற்கு எதிராக சதமடித்திருந்தார். அதன்பிறகு சதமடிக்கவில்லை.

* இந்தியா தொடர்ந்து 5 ஒருநாள் போட்டிகளில் 300 ரன்  கடந்துள்ளது. ஆஸி.க்கு எதிரான தொடரில் 308/8, 338/9, 302/5... தற்போது இங்கிலாந்துக்கு எதிராக 317/5, 336/6 குவித்துள்ளது.

* தொடர்ந்து 3 போட்டியில் கடைசி 10 ஓவர்களில் 110 ரன்னுக்கு  மேல் விளாசியுள்ளது.  ஆஸி.க்கு எதிராக கான்பெராவில் 110/0, தற்போது இங்கிலாந்துக்கு எதிராக 112/1, 126/3 எடுத்துள்ளது.

* 4வது ஓவரில்  ஷிகர் அடித்த பந்தை பிடித்த ஸ்டோக்ஸ் அதில் எச்சில் தடவினார். அதைப் பார்த்த  நடுவர்கள் கடுமையாக எச்சரித்தனர். இவர் ஏற்கனவே அகமதாபாத் பகல்/இரவு டெஸ்டிலும் இதே காரணத்துக்காக எச்சரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

*  இந்தியாவுக்கு எதிராக  ராய் - பேர்ஸ்டோ ஜோடி 3வது முறையாக 100 ரன் சேர்த்தது.

Related Stories:

>