×

நீட் தேர்வால் அதிக மாணவர்கள் மருத்துவக்கல்வியில் சேர முடியவில்லை: முதல்வர் எடப்பாடி ஒப்புதல்

சிவகங்கை: நீட் தேர்வால் அதிகமான மாணவர்கள் மருத்துவக்கல்வியில் சேர முடியவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சிவகங்ைக தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து அரண்மனை வாசலில் நேற்று பிரசாரம் செய்தார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-

உங்களைப்போல் கூட்டத்தில் இருந்து படிப்படியாக வளர்ந்து வந்தவன் நான். இன்று முதல்வராக உள்ளேன். நானும் ஒரு விவசாயி. அதனால்தான் விவசாயிகளுக்கான திட்டங்களை நிறைவேற்றுகிறேன். கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளியில் படித்த 6 பேர் மட்டுமே மருத்துவக்கல்வி படிப்பில் சேர்ந்தனர். நீட் தேர்வால் அதிகமான மாணவர்கள் மருத்துவக்கல்வியில் சேர முடியவில்லை. இது குறித்து நான் சிந்தித்தேன். சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஆலோசித்து 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இதனால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியில் கூடுதல் இடம் கிடைத்துள்ளது. ‘‘உள் இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது. ஆனால் படிப்பதற்கு பணம் இல்லையே’’ என ஒரு ஏழை மாணவி என்னிடம் அழுதார். இதனால் மருத்துவக்கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் என அறிவித்தேன். இவ்வாறு பழனிசாமி பேசினார். பிரசாரத்தில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பாஸ்கரன், வேட்பாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வேனில் இடமில்லை அமைச்சர் ‘‘அப்செட்’’ சிவகங்கையில் நடந்த பிரசாரத்தில் வேட்பாளர் செந்தில்நாதன் ஒரு வேனிலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவருடைய பிரசார வாகனத்திலும் இருந்தனர். அமைச்சர் பாஸ்கரனை வேனில் ஏற்றவில்லை. இதனால் அவர் கீழே கோபத்துடன் காணப்பட்டார். அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

Tags : NEED ,Chief Minister ,Edappadi , neet
× RELATED இன்னும் 9 நாளில் வாக்குப்பதிவு தமிழகம்...