×

அரசியலில் இருந்து ஒதுங்குவதே சைதை துரைசாமியின் மைனஸ்: சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர், சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் மா.சுப்பிரமணியன்

* உங்களை எதிர்த்து போட்டியிடும் சைதை துரைசாமியும் முன்னாள் மேயர், அவரை சரியான போட்டியாளராக நினைக்கிறீர்களா?

 அவர் மேயராக இருந்ததற்கான அடையாளம் சென்னையில் எதுவுமே கிடையாது. 5 ஆண்டாக அவர் என்ன செய்தார் என்பதற்கு ஒன்றை கூட வெளிப்படுத்த முடியாது. அதனால் அவரை ஒரு போட்டியாளராக நான் நினைக்கவில்லை. அவர் ேமயராக இருந்த போதும், எம்எல்ஏவாக இருந்தபோதும் சைதாப்பேட்டையில் அவர் செய்த ஒரு அடையாளத்தை கூட சொல்ல முடியாது. நான் மேயராக இருந்தபோது, அடையாற்றின் குறுக்கே ஒரு மேம்பாலம். ஜோன்ஸ் சாலையில் ஒரு சுரங்கப்பாதை. 1996ல் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது சர்தார் படேல் சாலையில் ஒரு மேம்பாலம், பஜார் சாலையில் ஒரு சுரங்கப்பாதை. 1970ல் கலைஞர் முதல்வராக இருந்தபோது தியாகி அரங்கநாதன் பெயரில் ஒரு சுரங்கப்பாதை. இது தான் சைதாப்பேட்டையில் இருக்கிற பெரிய அடையாளங்கள். இவை அனைத்தும் திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.
அதுமாதிரி எதையாவது சைதை துரைசாமி அவர் காலத்தில் செய்தார் என்று சொல்லி ஒரே ஒரு கல்வெட்டு ஆதாரத்தை காட்ட முடியுமா?. அதனால் அவர் எனக்கு சரியான போட்டியாளர் என நான் கருதவில்லை.

* ஒரு ஆண்டாக மக்களை சந்திக்காமல் கட்சியிலிருந்தே ஒதுங்கியிருந்த சைதை துரைசாமியை திடீரென உங்களுக்கு எதிராக நிறுத்தியிருப்பது ஏன்?

ஒரு ஆண்டாக இல்லை, திமுக வேட்பாளர் புருஷோத்தமனை எதிர்த்து நின்றார். அப்போது திமுகவை விட அவர் 1967 வாக்குகள் குறைவாக பெற்று திமுகவிடம் தோற்றார். 1981ல் திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.தரை எதிர்த்து நின்றார். அப்போது திமுக அவரை விட 32,857 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. 1996ல் சைதை கிட்டுவை எதிர்த்து நின்றார். அப்போது 29,983 வாக்குகள் வித்தியாசத்தில் சைதை கிட்டு வெற்றி பெற்றார். அவர் நின்ற 4 தேர்தல்களில் 3 தேர்தல்களில் இந்த அளவுக்கு வாக்கு வித்தியாசத்தில் தோற்றுள்ளார்.

1984ல் மட்டும் எம்ஜிஆர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்த போது, 190 ஓட்டுகளில் சைதை துரைசாமி வெற்றி பெற்றதாக அறிவித்தனர். அது கூட செல்லாத ஓட்டுகள் என 3000 ஓட்டுகளை எடுத்து வைத்து விடுகின்றனர். அதிமுக ஆட்சிக்கு வரப் போகிறது என்ற உடன், அங்கிருந்த திமுக ஏஜெண்டுகளை அராஜகமாக வெளியேற்றி செல்லாத ஓட்டுகளை எண்ண வைத்து வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொள்கிறார். இது தான் அவரது வரலாறு.

* உங்களது பிளஸ் என்ன? அவரது மைனஸ் எது என எதை நினைக்கிறீர்கள்?

 எனது பிளஸ் என்பது திமுக தலைவரின் 7 உறுதிமொழிகளும், தேர்தல் வாக்குறுதிகளும். சைதாப்பேட்டை என்றாலே இது காலம் காலமாக திமுகவுக்க வாக்களித்துக் கொண்டிருக்கிற தொகுதி. திமுக செய்து கொண்டிருக்கிற, செய்யப் ேபாகிற நன்மைகளை தொகுதி மக்கள் அனுபவித்தவர்கள். அந்த வகையில் திமுக மீது அதீத பற்றுக் கொண்டிருக்கின்றனர். அது எனக்கு பிளஸ். அவருக்கு மைனஸ், அவ்வப்போது அரசியலில் இருந்து ஒதுங்குவது. சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றார். ஆனால் வேட்பு மனுவில் இ-மெயில் ஐடி ‘நில்’ என்று குறிப்பிட்டுள்ளார். பேஸ்புக், டிவிட்டர் அக்கவுண்ட் எதுவுமே கிடையாது. அவர் பொய் சொல்கிறார் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.

* திமுக வேட்பாளர்கள் வீடுகளில் ரெய்டு நடத்துவதை எப்படி பார்க்கிறீர்கள்?

 மத்திய அரசு அவர்கள் கையில் இருப்பதால் இந்த வருமான வரித்துறை, சிபிஐ இவற்றை எல்லாம் அவர்கள் கையில் வைத்துக் கொண்டு ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பது போன்று எதிர்கட்சிகளை பயமுறுத்துகிற விஷயம் தானே தவிர, இதனால் யாருடைய வெற்றியையும் யாரும் தடுத்துவிட முடியாது.

Tags : Saitha Duraisamy ,Chennai South District ,DMK ,Saidapet ,Ma. Subramanian , Ma. Subramanian
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி