×

சொன்னாரே செஞ்சாரா? மக்கள் நலனை புறம்தள்ளிய எம்எல்ஏ

ஈரோடு மாவட்டத்தில் பவானி தொகுதி ஜமக்காள உற்பத்திக்கு பெயர்போன தொகுதியாகும். ஆனால், இன்று மத்திய-மாநில அரசுகளின் திட்டங்கள், செயல்பாடுகள் காரணமாக ஜமக்காள தொழில் அழிவின் விழிம்பில் இருக்கிறது. இத்தொகுதியில், கடந்த 2016ம் ஆண்டு திமுக-அதிமுக நேரடியாக மோதியது. இதில், அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.சி.கருப்பணன் வெற்றி பெற்று, சுற்றுச்சூழல்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால் இவர், தொகுதியில் குறிப்பிடும்படியாக எதையும் செய்யவில்லை என்கின்றனர் தொகுதி மக்கள்.

பவானி நகராட்சியாக உள்ள போதிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் மிகவும் பின்தங்கி உள்ளது. சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை, இதனால், போக்குவரத்து நெரிசல் தீர்க்க முடியாத பிரச்னையாக உள்ளது.
போக்குவரத்து நெரிசல்களுக்கு தீர்வு காணும் வகையில் பவானியை சுற்றிலும் ரிங்ரோடு அமைக்க கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சர்வே மேற்கொள்ளப்பட்டு, பணி முடிக்கப்பட்டது. ஆனால், இன்னும் திட்டப்பணி துவங்கவில்லை. அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.

பவானியில் இருந்து மேட்டூர் செல்லும் சாலையானது தொப்பூர் வரை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டது. ஆனால், இதற்கான பணிகள் எதுவும் நடக்கவில்லை. தென்னகத்தின் காசி என புகழப்படும் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். ஆனால், கோயில் வளாகத்தில் அடிப்படை வசதிகள்கூட இல்லை. இதை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. சுற்றுச்சூழல்துறை அமைச்சராக உள்ள கருப்பணன் தனது தொகுதியில் நிலவும் சுற்றுச்சூழல் பிரச்னைக்குகூட தீர்வு கண்டது இல்லை என்கிறார்கள் தொகுதி மக்கள்.

பவானி நகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் அனைத்தும் பவானி பஸ் ஸ்டாண்டு அருகில் உள்ள கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதியில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகின்றது. பவானியை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பவானி, காவிரி ஆறுகளை மாசுபடுத்தி வருகிறது. இதை தீர்க்க, ரூ.700 கோடி செலவில் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்படவில்லை. தொகுதியில் உள்ள கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உருப்படியான திட்டங்கள் எதையும் செய்யவில்லை. அழிந்து வரும் ஜமக்காள தொழிலை காப்பாற்றவும், நவீனப்படுத்தவும் நடவடிக்கை இல்லை. அடுத்த தலைமுறைக்கு இத்தொழிலை கொண்டுசெல்லவும் ஜமக்காள தொழில்நுட்ப கல்லூரி அமைக்கவும் நடவடிக்கை இல்லை. இத்தொகுதியில், அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக், அரசு விவசாய தொழில்நுட்ப கல்லூரி அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் உள்ளது. கோயில் கும்பாபிஷேகங்களில் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியது மட்டுமே தனது பெரும் சாதனையாக கருப்பணன் கருதி வருவதாகவும், மக்களின் நலனை புறம்தள்ளிவிட்டார் என்றும் தொகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

Tags : MLA , Erode
× RELATED திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு...