எஸ்.ஆர்.ராஜாவுக்கு ஆதரவாக டி.ஆர்.பாலு வாக்கு சேகரிப்பு

தாம்பரம்: தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜாவை ஆதரித்து திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பியுமான டி.ஆர்.பாலு நேற்று பீர்க்கன்காரணை பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது, எஸ்.ஆர்.ராஜா பேசுகையில், ‘தாம்பரத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என திட்டமிட்ட போது. தாம்பரத்தில் இருந்த பேருந்து நிலையம் தற்காலிகமாக பீர்க்கன்காரணை பகுதிக்கு மாற்றப்பட்டது. ஆனால், தாம்பரத்தில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த பின்னரும், இன்னும் பீர்க்கன்காரணை பகுதியில் உள்ள அந்த பேருந்து நிலையம் அகற்றப்படவில்லை. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

விரைவில் திமுக ஆட்சி அமைந்தவுடன் அந்த பேருந்து நிலையத்தை அங்கிருந்து அகற்றி, போக்குவரத்து நெரிசலை குறைப்பேன். பீர்க்கன்காரணை பகுதியில் சமுதாய நலக்கூடம் வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர், அதனை நிறைவேற்றி கொடுப்பேன். பீர்க்கன்காரணை - பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில், ரயில்வே பகுதியில் மேம்பால பணிகள் முடிந்து விட்டன. ஆனால்,  சாலை பகுதியில் மேம்பால பணிகள் முடிக்கப்படாமல் அப்படியே உள்ளன. கிடப்பில் உள்ள மேம்பால பணிகளை உடனடியாக முடிக்க நடவடிக்கை எடுப்பேன். மேலும், இப்பகுதி மக்களுக்கு பாலாறு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்’ என்றார். பிரசாரத்தின் போது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர்.

Related Stories:

More