×

மு.க.ஸ்டாலின் பிரசாரத்துக்கு இடையூறு ஏற்படுத்த முயற்சி: எ.வ.வேலுவின் வீட்டில் ஐடி ரெய்டு தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

சென்னை:திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் எ.வ.வேலுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது எ.வ.வேலுக்கு சொந்தமான 18 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதற்கு எதிராக டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், வில்சன் ஆகியோர் புகார் மனுவை அளித்தார். புகார் மனு அளித்த பின்னர் டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த பேட்டி:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மற்றும் அதை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றார். அப்போது அவர் எ.வ.வேலுக்கு சொந்தமான கல்லூரியில் தங்கியிருந்தார். இதனால் திட்டமிட்டே வருமான வரித்துறையினர் எ.வ.வேலுக்கு சொந்தமான இல்லம் மற்றும் அவருடைய அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ. கருத்து தெரிவித்திருக்கிறது. இதிலேயே தெரிகிறது வருமான வரித்துறை சோதனை ஏன் நடந்தது என்று. ஆனால் அதிமுக வேட்பாளரின் வாகனத்தில் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏன் அவருடைய இல்லத்திலும், அவருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தவில்லை.

மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் பிரசாரம் செய்யப்போகிறார். அவருடைய பிரசாரத்தை முறியடிக்கும் நோக்கில் தான் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டது. தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று உள்ளது. எ.வ.வேலுக்கு எதிராக போட்டியிடும் நபர் பாஜவைச் சேர்ந்தவர். அதனால் தான் பாஜ எப்படியாவது வெற்றி பெறும் நோக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தால் மட்டுமே அவர்கள் நடவடிக்கை எடுக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : BC ,Stalin ,ID Raid Electoral Commission ,Velu , IT raid
× RELATED சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி...