மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அறுபத்து மூவர் திருவிழா கோலாகலம்

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் திருவிழா கோலாகலமாக நடந்தது. விழாவை காண சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா வெகு விமர்சையாக நடத்தப்படும். இந்தாண்டு பங்குனி பெருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. தேரோட்டத்தையொட்டி கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் காலை 8 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். சர்வ அலங்காரத்தில் இருந்த சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து காலை 8.45 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் திருவிழா நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் நடந்தது. முன்னதாக, காலை 10.30 மணிக்கு திருஞானந்த சம்பந்த சுவாமிகள் எழுந்தருளல், 12 மணிக்கு என்பை பூம்பாவையாக்கி அருளுதல் நிகழ்ச்சி, பிற்பகல் 2.45 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் ஏறி கபாலீஸ்வரர் 63 நாயன்மார்களுக்கு காட்சி அளித்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய...’ என முழக்கமிட்டனர். தொடர்ந்து விநாயகர் முன்னே சப்பரத்தில் செல்ல, வெள்ளி சப்பரத்தில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர், முண்டகக்கண்ணியம்மன், அங்காள பரமேஸ்வரி, வீர பத்திர சுவாமிகள் ஆகியோர் வீதியுலா வந்தனர். அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் 63 நாயன்மார்களும் நகர்வலம் வந்தனர். தொடர்ந்து காவல் தெய்வமான கோலவிழியம்மனும் நகர்வலம் வந்தார். இதையடுத்து உற்சவ மூர்த்திகள் அனைவரும் இரவு 10 மணியளவில் மீண்டும் கோயிலை அடைந்தனர். 63 நாயன்மார்கள் தனித்தனி சப்பரத்தில் மாட வீதிகளில் வலம் வரும் கண்கொள்ளா காட்சியை காண காலையில் இருந்தே சென்னை மாநகர் மட்டுமன்றி புறநகர் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மயிலாப்பூரில் குவிந்தனர். விழாவை முன்னிட்டு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தார், தொழிற்சங்கத்தினர், அரசியல் கட்சியினர் போன்றோர் மக்கள் கூடும் இடங்களில் சிறப்பு பந்தல் அமைத்து அன்னதானம், நீர் மோர், இனிப்புகள் வழங்கினர்.

அறுபத்து மூவர் திருவிழாவையொட்டி மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கோயிலை சுற்றி மாட வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டனர். ஒலி பெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு அவ்வப்போது போலீசார் அறிவுரை வழங்கினர். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

Related Stories:

>