உரிய அனுமதியின்றி பிரசாரம்: நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் பிரசார வாகனம் பறிமுதல்

சென்னை: விருகம்பாக்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட பகுதியில் முன் அனுமதி பெறாமல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பயன்படுத்திய பிரசார வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.விருகம்பாக்கம் சட்டப்பேரவை தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ராஜேந்திரன் போட்டியிடுகிறார். பொதுவாக, தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி வேட்பாளர்கள் தங்களது பிரசாரத்திற்கு பயன்படுத்தும் வாகனங்கள் குறித்து சம்பந்தப்பட்ட தொகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களில் முன் அனுமதி பெற வேண்டும். ஆனால், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ராஜேந்திரன் நேற்று கே.கே.நகர் ராமசாமி தெருவில் காவல் துறையின் முன்அனுமதி பெறாத ஆட்டோ ஒன்றில் ஒலி பெருக்கி கட்டிக்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது தேர்தல் பறக்கும் படையினர் அளித்த தகவலின் படி கே.ேக.நகர் போலீசார், ராமசாமி தெருவில் முன் அனுமதி பெறாமல் பிரசாரத்திற்கு பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இதனால், நாம் தமிழர் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் முன் அனுமதி பெறாமல் வாகனத்தை பிரசாரத்திற்கு ஈடுபடுத்தியதால் தேர்தல் ஆணைய விதிகளின்படி ஆட்டோவை பறிமுதல் செய்வதாக போலீசார் தெரிவித்தனர். அதைதொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கலைந்து சென்றனர்.

Related Stories:

>