எங்க தலைமையில் கூட்டணி; சந்தேகமே வேண்டாம்: தேர்தலில் வெற்றி பெற்றால் நான் தான் முதல்வர்..என்.ஆர்.காங்.,தலைவர் ரங்கசாமி அதிரடி

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் நான்தான் முதல்வர் என என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இருப்பினும், முதல்வர் வேட்பாளர் பெயர் அறிவிக்கபடாமல் தேர்தல் பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜகவை பொருத்த வரை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நமச்சிவாயம் முதல்வர் என்று நினைத்து வருகிறது. ஆனால், என்.ஆர்.காங்கிரஸ் தங்கள் தலைமையில் கூட்டணி அமைந்துள்ளதால், ரங்கசாமிதான் முதல்வர் என்று சொல்லி வருகின்றனர். இருப்பினும், பாஜகவின் குரு அமித்ஷா என்ன திட்டமிட்டுள்ளார் என்று யாருக்கும் தெரியவில்லை.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், புதுச்சேரியில் தனியார் ஹோட்டலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கறிஞர் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று பேசிய என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, இம்முறை மீண்டும் ஆட்சியை பிடிப்போம். எங்களுக்கு மக்கள் மீதும், புதுச்சேரி வளர்ச்சி மீதும் அக்கறை உள்ளது. கூட்டணியில் முதல்வர் பதவி கிடைக்குமா? தருவார்களா? என்ற குழப்பங்கள், கேள்விகள் எழுப்புகின்றனர்.

நமது கூட்டணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைமை வகிக்கிறது. முதல்வர் யார்? என்ற குழப்பத்துக்கே வேலையில்லை. நானே முதல்வர். தேர்தலில் வெல்வோம். சீர் செய்வோம் என்றார்.  முக்கியமாக புதுச்சேரியின் அதிகாரம் தெரிந்து ஆள வேண்டும். அதிகார சண்டையிலேயே ஐந்து ஆண்டு போய்விட்டது. பின்னுக்கு தள்ளப்பட்ட புதுச்சேரி அரசை முன்னுக்கு கொண்டு வருவோம் என்றார். ரங்கசாமியின் இந்த கருத்து கூட்டணி கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தேர்தலில் வெற்றி பெற்றாலும் பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் தேர்வு செய்வதில் பெரும் போர் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

More
>