×

நாகர்கோவிலில் போலீஸ், துணை ராணுவம் அணிவகுப்பு: பதற்றமான வாக்குசாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

நாகர்கோவில்: நாகர்கோவிலில் நேற்று  போலீஸ், துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. இதில் 225 பேர் கலந்து கொண்டனர். குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுடன், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் பாதுகாப்பு பணியில் போலீசார், துணை ராணுவத்தினர் உள்பட சுமார் 5 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளனர். சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தேர்தலை அமைதியாக நடத்தும் வகையிலும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வரலாம் என்பதை வலியுறுத்தியும், காவல்துறை சார்பில் தற்போது கொடி அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகர்கோவில் இருளப்பபுரம், வேதநகர், இடலாக்குடி ஆகிய இடங்களில் போலீஸ், துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. டி.எஸ்.பி. வேணுகோபால் தலைமையில் 7 இன்ஸ்பெக்டர்கள், 7 எஸ்.ஐ.க்கள், 145 போலீசார், 65 துணை ராணுவத்தினர் உள்பட சுமார் 225 பேர் கலந்து கொண்டனர். இதற்கிடையே மாவட்டத்தில் 274 வாக்குசாவடிகள் பதற்றமானவை என்றும், 14 வாக்குசாவடிகள் மிகவும் பதற்றமானவைகள் என்றும் கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான மற்றும் மிக பதற்றமான வாக்குசாவடிகளில் துணை ராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்த வாக்குசாவடிகளில் நடக்கும் வாக்குப்பதிவு அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படும். இந்த நிலையில் எஸ்.பி. பத்ரி நாராயணன் நேற்று பதற்றமான வாக்குசாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் ஆய்வு செய்தார். வாக்குசாவடிகளில் எந்த மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பது பற்றி போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் கன்னியாகுமரி, தென்தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 8 வாக்கு சாவடிகளை அவர் பார்வையிட்டார். இதே போல் புதுக்கடை, மார்த்தாண்டம், களியக்காவிளை, கொல்லங்கோடு, நித்திரவிளை பகுதிகளில் உள்ள 17 வாக்கு சாவடிகளையும் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags : Nagargov ,S. , Police, paramilitary march in Nagercoil: S.P. Study
× RELATED நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட...