×

ராமேஸ்வரம், காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 54 மீனவர்கள் ஒரே நாளில் சிறைபிடிப்பு

* கற்களை வீசி தாக்கி 5 படகுகள் பறிமுதல்
* இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
* கடலோர மாவட்ட மக்கள் கொந்தளிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், ஜெகதாபட்டினம் மற்றும் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் 54 பேரை இலங்கை கடற்படையினர் ஒரே நாளில் சிறைபிடித்து சென்ற சம்பவம் கடலோர மாவட்ட மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளத. மீனவர்களை சிறைபிடித்ததுடன், அவர்களது 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்யதுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து 300க்கும் அதிகமான விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் பாக் ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க சென்றனர். இரவு மீன் பிடித்து கொண்டு இருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், திடீரென மீனவர்கள் மீது கற்களை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தி, விரட்டியடித்தனர்.

மேலும் 2 விசைப்படகுகளில் இருந்த மீனவர்கள் மரியசிங்கம் (39), ராபின்சன் (42), பிராங்க்ளின் (22), சுப்ரிட் (27), சோனைமுத்து (42), சக்தி (32), ஜான் (19), சிவா (40), கதிர் (30) உள்ளிட்ட 20 மீனவர்களை சிறைபிடித்தனர். அவர்களது 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கையால் மற்ற மீனவர்கள் உடன் கரை திரும்பினர். இந்த தாக்குதலில் மீனவர்கள் சிலர் காயமடைந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்று புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 20 மீனவர்களையும், 2 படகுகளையும், மேலும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 14 மீனவர்களையும், அவர்களது படகையும் நேற்று முன்தினம் இரவு இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

மொத்தம் 5 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 54 பேரையும் தலைமன்னார், காரை நகர், திரிகோணமலை கடற்படை முகாமில் படகிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.ஒரே நாளில் 54 மீனவர்கள் படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் குடும்பத்தினர் மற்றும் கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியா முடிவால் சிறைபிடிப்பா?
இலங்கை உள்நாட்டு போரின்போது, நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாட்டுக்கு எதிராக ஐநா மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகள் வாக்களித்தன. இதில் கலந்து கொள்ளாமல் இந்திய அரசு புறக்கணித்தது. இதனால் அந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது. தங்களுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்காத இந்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்வினையாக இலங்கை அரசின் இந்த சிறைபிடிப்பு நடவடிக்கை அரங்கேறியுள்ளது என மீனவர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

‘கச்சத்தீவை மீட்கவேண்டும்’
ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி கூறுகையில், ‘‘நம் நாட்டின் மீனவர்களை தொடர்ந்து இதுபோன்ற துயரத்தில் இலங்கை கடற்படை ஆழ்த்தி வருகிறது. நமது நாட்டின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவை அரசு மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் இப்பிரச்னை தீர வழி பிறக்கும். மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களின் படகுகளை உடனடியாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை தூதரகத்திடம் நமது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்’’ என்றார்.

Tags : Rameswaram ,Karaikal , 54 fishermen from Rameswaram and Karaikal arrested on the same day
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...