×

பந்தலூர் அருகே காட்டு யானைகள் தாக்கி 2 பேர் பலி

பந்தலூர்: பந்தலூர் அருகே காட்டு யானைகள் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உப்பட்டி பெருங்கரையை சேர்ந்தவர் முத்துசாமி (63), ஏலமன்னா பகுதியை சேர்ந்தவர் சடையன் (52). இருவரும் கூலி தொழிலாளர்கள். இவர்கள் நேற்று மதியம் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். பெருங்கரை அம்மன்கோவில் அடிசனல் பீட் அருகே வந்தபோது, அப்பகுதியில் குட்டியுடன் முகாமிட்டிருந்த 3 காட்டு யானைகள், இருவரையும் துரத்தி கடுமையாக தாக்கியது. சம்பவ இடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த  பிதர்காடு வனத்துறையினர், யானைகளை விரட்டிவிட்டு இருவரையும் காப்பாற்ற முயன்றனர்.

ஆனால், யானைகள் ஆக்ரோஷம் அடைந்து வனத்துறையினரையும் துரத்தியதால் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். யானைகள் சென்றபின், மீண்டும் வந்த வனத்துறையினர், முத்துசாமி, சடையன் இருவரையும் மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மருத்துவமனைக்கு பிதர்காடு ரேஞ்சர் மனோகரன், தேவாலா டி.எஸ்பி. அமிர் அகமது, ஏ.டி.எஸ்பி. முத்துமாணிக்கம் உள்ளிட்டோர் வந்து விசாரணை நடத்தினர். அப்போது, கும்கிகள் வர வரவழைக்கப்பட்டு காட்டு யானைகளை கண்காணித்து விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

மக்கள் சாலை மறியல்
யானைகள் தாக்கி இருவர் இறந்த சம்பவம் தொடர்பாக பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில் அனைத்து கட்சிகள் சார்பில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், கடந்த 3 மாதத்திற்கு முன்பு பந்தலூரில் யானை தாக்கி 3 பேர் இறந்தனர். இந்நிலையில், நேற்றும் யானைகள் தாக்கி இருவர் பலியாகி உள்ளனர். யானைகளிடம் இருந்து மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். வனத்துறையினரின் மெத்தனப் போக்கால்தான் உயிரிழப்பு சம்பவம் நடந்து வருகிறது. ஆகையால், கூடலூர் டிஎப்ஓ உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில், யானைகளிடம் இருந்து உரிய பாதுகாப்பு அளிக்கக்கோரி பந்தலூர் அருகே பெருங்கரை பகுதியில் ஊர்மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வனத்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

Tags : Pandharpur , Two killed in wild elephant attack near Pandharpur
× RELATED பந்தலூர் அருகே விவசாய நிலங்களை...