×

தேர்தல் விதிகளை மீறி முதல்வர் எடப்பாடி வருகைக்காக அவசரமாய் தார்ச்சாலை அமைப்பு: ராஜபாளையம் மக்கள் கடும் அதிருப்தி

ராஜபாளையம்: ராஜபாளையம் நகர் பகுதிக்கு இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்திற்கு வருகிறார் என்பதற்காக விதிகளை மீறி அவசர கோலத்தில் தரமற்ற தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ராஜபாளையம் நகர் பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், ரயில்வே மேம்பால பணி ஆகியவை கடந்த சில ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பணியாக நிறைவு செய்து அடுத்த பணியைத் துவக்காமல், அனைத்து பணிகளையும் ஒரே நேரத்தில் துவக்கியதால், ராஜபாளையத்தில் எந்த திசைக்கும் செல்ல முடியாத அளவிற்கு பள்ளமாக கிடக்கிறது.

இதன் காரணமாக ஏற்படும் தூசியால் மக்கள் ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பணி முடிந்த பகுதிகளில் சாலையை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ராஜபாளையம் தொகுதி திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியன் மக்களை திரட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தியும், அதிமுக அரசு கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்திற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 26) ராஜபாளையம் நகருக்கு வருகிறார். இதற்காக அவசர, அவசரமாக தார்ச்சாலை அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. தரமற்ற முறையில் அவசர கோலத்தில் அமைக்கப்படும் இந்த சாலைப்பணி ராஜபாளையம் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ``ராஜபாளையம் பகுதியில் பல ஆண்டுகளாக தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதற்காக பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளோம். அப்போது அதையெல்லாம் கண்டு கொள்ளாத அரசு நிர்வாகம், தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிறார் என்பதற்காக, இரவோடு இரவாக தார்ச்சாலையை தரமற்ற வகையில் அமைத்து வருகிறது. முதல்வர் வருகைக்காக இப்படி அவசர சாலை அமைப்பவர்கள், மக்கள் பலமுறை வலியுறுத்தியும் ஏன் தார்ச்சாலை அமைக்கவில்லை? அத்துடன் சாலைகளை மறித்து பெரிய, பெரிய போக்கஸ் விளக்குகள் அமைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகிறார்கள்.

தேர்தல் ஆணையம் சுயமாக இயங்குகிறதா என்ற கேள்வி எழுகிறது. அது யார் கட்டுப்பாட்டிலோ இருப்பதால் தான் தேர்தல் விதிகளை மீறி முதல்வர் வருகைக்காக இப்படி ஒரே நாளில் சாலை அமைக்கப்படுகிறது. எனவே, மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கண்ணன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Darsala ,Chief Minister ,Edappadi ,Rajapalayam , Darshala organization urges CM to visit Edappadi in violation of election rules: Rajapalayam
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...