×

மஞ்சூர் அருகே கரடி நடமாட்டத்தை கண்காணிக்கும் வனத்துறை

மஞ்சூர்: மஞ்சூர் அருகே குடியிருப்பு பகுதியில் கரடி நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது ஓணிகண்டி. நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கரடி ஒன்று இப்பகுதியில் நடமாடி வருகிறது. பகல் நேரங்களில் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களிலும் இரவு வேளைகளில் குடியிருப்பு மற்றும் கடை வீதியில் உலா வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இப்பகுதியில் உள்ள கனகன் என்பவரது டீ கடையின் பின்பக்க தடுப்பை உடைத்து உள்ளே புகுந்த கரடி, 6 லிட்டர் பாலை குடித்துவிட்டு பொருட்களை சூறையாடி சென்றது.

இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, குந்தா ரேஞ்சர் சரவணன் உத்தரவின்பேரில் வனவர் ரவிக்குமார் மேற்பார்வையில் வனத்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக ஓணிகண்டி சுற்றுபுற பகுதிகளில் கரடி நடமாட்டம் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கரடி உணவு தேடியே குடியிருப்பு பகுதிக்குள் வருவதாகவும், பொதுமக்கள் தங்களது வீடுகளில் மீதமாகும் உணவு பண்டங்களை சாலையோரம் மற்றும் பொது இடங்களில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags : Forest Department ,Manzoor , Forest Department monitors bear migration near Manzoor
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...