×

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஏப்.3-ம் தேதி தமிழகம் வருகை: நாளை வர திட்டமிட்டிருந்த நிலையில் ஒத்திவைப்பு

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டபேரவை தேர்தல் வருகிற 6ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதே நேரத்தில் தேர்தல் பிரசாரம் வருகிற 4ம் தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது. தேர்தல் நெருங்கி வரும் அதே வேளையில் அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் தேசிய தலைவர்களும் பிரசாரம் செய்ய தமிழகம் நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் பிரியங்கா காந்தி வரும் 27ம் தேதி கன்னியாகுமரி வர உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை வர திட்டமிட்டிருந்த நிலையில் வரும் 3-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக காங்கிரஸ் தகவல் தெரிவித்துள்ளது. ஏப் 3-ம் தேதி கன்னியாகுமரியில் நடக்கும் காங்கிரஸ் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் அந்த மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.

அடுத்தடுத்து தேசிய தலைவர்கள் தமிழகம் வருகை
* பிரதமர் நரேந்திர மோடி வருகிற 30ம் தேதி தாராபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு வர உள்ளார்.
* ஏப்ரல் 2ம் தேதி கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்கிறார்.
* அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வருகிற 28ம் தேதி தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
* அகில இந்திய பாஜ தலைவர் ஜே.பி.நட்டா நாளை தமிழகம் வருகிறார்.

தமிழகம் வர வாய்ப்புள்ள தேசிய தலைவர்கள்;
ஏற்கனவே நீலகிரி மற்றும் விழுப்புரத்தில் பிரசாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அடுத்தக்கட்ட பிரசாரத்துக்கு தமிழகம் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், பிருந்தா காரத், டி.ராஜா, சுதாகர் ரெட்டி, ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும், தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வர இருப்பதாக கூறப்படுகிறது.

களைகட்ட தொடங்கிய தேர்தல் திருவிழா
தேசிய தலைவர்கள் தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதால் தமிழக தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மக்களை கவரும் வகையில் பல்வேறு நூதன பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் தேர்தல் திருவிழா களைக்கட்ட தொடங்கியுள்ளது.

Tags : Congress General Secretary ,Priyanka Gandhi ,Tamil Nadu , Congress General Secretary Priyanka Gandhi to visit Tamil Nadu on April 3: Postponement as scheduled for tomorrow
× RELATED வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!