×

2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து வங்கதேசத்துக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி: 15 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக வெளிநாடு பயணம்

டெல்லி: கொரோனா ஊரடங்கிற்கு பின் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 2020-ம் ஆண்டு தொடக்கத்திலேயே இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியதால் அனைத்து நாடுகளுக்குமான விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அதன் காரணமாக பிரதமர் மோடி எந்த நாட்டிற்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. இதன் மூலம் 2020-ஆம் ஆண்டு பிரதமருக்கு வெளிநாடு பயணம் இல்லாத ஆண்டாக மாறியது. இதற்கிடையே, வங்க தேசத்தின் 50-வது சுதந்திர தின விழா தலைநகர் டாக்காவில் பிரமாண்ட விழா வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்திருந்தார். அழைப்பினை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று காலை டெல்லியில் இருந்து வங்கதேசத்துக்கு புறப்பட்டு சென்றார். சுதந்திர தின பொன்விழா நிகழ்ச்சிகளை அடுத்து வங்கதேசத்தின் தந்தை எனப்படும் ஷேக் முஜிபூர் ரகுமானின் நூறாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அங்கு முஜிபூர் ரகுமானின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார். ஜசோளீஸ்வரி காளி கோவிலுக்கு சென்று வழிபட உள்ள பிரதமர் மோடி ஓரக்கண்டி என்ற இடத்தில் மடுவா சமூகத்தின் பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார்.

மேலும் வங்கதேச அதிபரை சந்திப்பதுடன், மற்ற உயர்பொறுப்புகளில் உள்ளவர்களையும் சந்தித்து உரையாட உள்ளார். பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி; எனது பயணம், பிரதமர் ஷேக் ஹசீனாவின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் வங்கதேசம் அடைந்துள்ள வியப்பூட்டும் பொருளாதார மற்றும் வளர்ச்சி ரீதியிலான முன்னேற்றங்களுக்குப் பாராட்டுத் தெரிவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக மட்டுமல்லாமல், இந்தச் சாதனைகளுக்கு இந்தியாவின் நிலையான ஆதரவை அளிக்கும் வகையில் இருக்கும் என தெரிவித்தார்.


Tags : PM Modi ,Delhi ,Bangladesh , Prime Minister Narendra Modi leaves Delhi for Bangladesh on a two-day visit for the first time in 15 months
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!