முதல்வருக்கு எதிராக போராட்டம் வீட்டுக்காவலில் கருணாஸ் எம்எல்ஏ

சிவகங்கை: சிவகங்கையில் பிரசாரம் ெசய்ய வரும் முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் அறிவித்த கருணாஸ் எம்எல்ஏ வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 26) பிரசாரம் செய்கிறார்.

அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கையில் போராட்டம் நடத்தப் போவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும், நடிகருமான கருணாஸ் எம்எல்ஏ அறிவித்திருந்தார். இதையடுத்து நேற்று மாலை முதல்வர் காரைக்குடி வரவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகளை கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். நடிகர் கருணாஸ் சிவகங்கை அருகே பனங்காடி கிராமத்தில் உள்ள தோட்ட வீட்டில் இருப்பதாக சிவகங்கை டவுன் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று கருணாசை கைது செய்து வீட்டு சிறையில் வைத்தனர். இதனை அறிந்து அவரது ஆதரவாளர்கள் அங்கு குவிந்தனர். இதையடுத்து ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories:

>