×

அதிமுகவினர் புறக்கணிப்பு தமாகா வேட்பாளர் அப்செட்

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் 20க்கும் மேற்பட்டோர் வாய்ப்பு கேட்டு கட்சி தலைமையிடம் விருப்ப மனு கொடுத்திருந்தனர். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகா ஈரோடு கிழக்கு தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று மல்லுக்கட்டியதால் வேறுவழியின்றி ஈரோடு கிழக்கு தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக யுவராஜா அறிவிக்கப்பட்டார். கட்சியில் சீனியர்கள் பலர் உள்ள நிலையில் யுவராஜாவுக்கு ஒதுக்கப்பட்டதால் கட்சியின் முக்கிய நிர்வாகிகளே அப்செட் ஆனார்கள். அதே வேளையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி அதிமுக சிட்டிங் தொகுதியை பறித்துக் கொண்டதால் அதிமுக முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். அந்த அதிருப்தியானது தொடர்ந்து நீடித்து வருகிறது.

குறிப்பாக வேட்பாளர் யுவராஜாவுடன் ஓட்டு கேட்டு அதிமுக முக்கிய நிர்வாகிகள் செல்வதில்லை. பெயரளவில் சிறிது நேரம் சென்றுவிட்டு அப்படியே ஏதாவது ஒரு பகுதியில் ஒதுங்கிக் கொள்கின்றனர். தமாகாவுக்கு என்று தொகுதியில் சொல்லிக்கொள்ளும் அளவில் ஓட்டு வங்கி இல்லாததால் அதிமுகவை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலை வேட்பாளர் யுவராஜாவுக்கு உள்ளது. ஆனால் அதிமுகவினரோ தொடர் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதோடு சிட்டிங் தொகுதியை பறித்ததற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற முடிவில் உள்ளதால் வேறுவழியின்றி பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு, வேட்பாளர் யுவராஜா கடந்த 2 நாட்களாக தொகுதியில் வாக்கிங் செல்வதுபோல நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் சிறுபான்மையினர், அரசு ஊழியர்கள் வாக்குகள் கணிசமாக உள்ளதால் யுவராஜுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பாஜ, அதிமுக கூட்டணி மீது சிறுபான்மையினர் கடும் கோபத்தில் உள்ளதை அறிந்து சமாதானப்படுத்த பல்வேறு கட்ட முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அது தோல்வியில் முடிந்தது. சொந்த கட்சிக்கென தனி ஓட்டு வங்கியும் இல்லை கூட்டணி கட்சியினரின் ஆதரவும் முழுமையாக இல்லாததால் வேட்பாளர் யுவராஜா அப்செட்டில் உள்ளார்.

Tags : AIADMK ,Tamaga , AIADMK
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...