பக்தர்களின் நமச்சிவாய கோஷம் விண்ணை பிளக்க மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: இன்று அறுபத்து மூவர் திருவிழா

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து ெகாண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்குனிப் பெருவிழாவின் முக்கிய விழாக்களில் ஒன்றான தேர் திருவிழா நேற்று காலை கோலாகலமாக நடந்தது. முன்னதாக, கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் நேற்று காலை 8 மணிக்கு சர்வ அலங்காரத்துடன் கோயிலில் இருந்து மேளதாளம் முழங்கிட பிரமாண்டமான தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. தேரில் இருக்கும் கபாலீஸ்வரருக்கு வில், அம்புடன் அலங்காரம் ெசய்யப்பட்டது. திரிபுர சம்ஹாரம் நடைபெறும் பொருட்டே இந்த வில், அம்பு அலங்காரத்தில் இருந்தார். சர்வ அலங்காரத்தில் இருந்த சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டன.

இதை தொடர்ந்து நேற்று காலை 8.45 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடந்தது. இதில், சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுவந்து வடம் பிடித்து தேர் இழுத்தனர். மேளதாளம், நாதஸ்வரம் முழங்க கபாலீஸ்வரர் எழுந்தருளிய தேர் அசைந்தாடியபடி வீதியுலா புறப்பாடு நடந்தது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘‘தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி... நமச்சிவாய வாழ்க... நாதன் தாள் வாழ்க... என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர். மயிலாப்பூரிலுள்ள நான்கு மாடவீதிகளிலும் கபாலீஸ்வரர் தேரில் அசைந்தாடி வரும் காட்சியை காண கொளுத்தும் வெயிலிலும் ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர். மாட வீதிகள் வழியாக வலம் வந்த தேர், பிற்பகலில் நிலைக்கு வந்து நின்றது. திருத்தேரில் இருந்து கபாலீஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளினார். தொடர்ந்து ஐந்திருமேனிகள் ஊர்வலம் நடந்தது. கோயிலை சுற்றிலும் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த தேரோட்டத்தை காண வந்த பக்தர்களுக்கு மாடவீதிகளில் பல இடங்களில் தொண்டு நிறுவனங்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மோர், குளிர்பானங்கள் வழங்கினர். இந்நிலையில், தேர் திருவிழாவை அடுத்து, பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் திருவிழா இன்று பிற்பகல் 2.45 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவில் வெள்ளி விமானத்தில் கற்பகாம்பாளுடன் கபாலீஸ்வரரும் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து, அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் எழுந்தருளல், தொடர்ந்து நாயன்மார்கள் பல்லக்குகள் வரிசையாகப் புறப்பட்டு மாடவீதிகளில் வீதியுலா வருகிறது.

மிகவும் பிரசித்தி பெற்ற இந்த அறுபத்து மூவர் விழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு வர்த்தகர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மோர், அன்னதானம் ஆகியவற்றை வழங்குவார்கள்.

Related Stories:

>