×

ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் தருவதற்கு அதிமுகவினர் டோக்கன் விநியோகம்: துறைமுகம் திமுக வேட்பாளர் சேகர்பாபு புகார்

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர அதிமுகவினர் டோக்கன் வழங்குவதாக மாவட்ட தேர்தல் அலுவலரிடம் துறைமுகம் வேட்பாளர் சேகர்பாபு புகார் அளித்துள்ளார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணப் பட்டுவாடா செய்வதாக திமுக வேட்பாளர் சேகர்பாபு சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் சார்ந்திருக்கிற துறைமுகம் தொகுதியிலும், மற்ற தொகுதிகளிலும் அதிமுகவினரின் தேர்தல் விதிமீறல் குறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளேன். அனைத்து இடங்களிலும் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்ட அட்டைகள் அனைத்து பகுதிகளும் வைக்கப்படுகிறது. வீட்டு வாசல்களில் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் உடைய ஸ்டிக்கர்களை வீடுகளில் ஒட்டி செல்கின்றனர்.

குறிப்பாக செஞ்சிலுவை தெரு, போர்ச்சுகீசியர் தெருவில் உள்ள ஜெயின் திருமண மண்டபத்தில் தினம் ஆயிரத்துக்கு மேற்ப்பட்டவர்கள் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தங்க வைக்கப்பட்டு உணவுகள் வழங்கிக் கொண்டுள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அதிமுகவினர் டோக்கன் விநியோகம் செய்கின்றனர். இதுகுறித்து புகார் அளித்தால் இரண்டு மணி நேரம் கழித்து தான் வருகின்றனர். இப்படி பணபலம், அதிகார துஷ்பிரயோகம் பண்ணலாம் என்று அதிமுகவினர் முடிவு செய்துள்ளனர். இதை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். துறைமுகம் தொகுதியில் உள்ள புகார்களை கூறியுள்ளோம். துறைமுகம் தொகுதியில் தேர்தல் பணிகள் என்று கூறி வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை தங்க வைத்துள்ளளனர். இவ்வாறு கூறினார்.

திமுகவினர் சாலை மறியல்
ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை, நேதாஜி நகர், மூப்பனார் நகர், இளையமுதலி தெரு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு நேற்று மதியம் டோக்கன் கொடுத்து பணம் விநியோகிப்பதாக, திமுகவினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில்,  பணம் விநியோகத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 2 பேரை, திமுகவினர் மடக்கி பிடிக்க முயற்சித்தனர். அவர்கள் பைக்கை விட்டுவிட்டு ஓடிவிட்டனர். இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசாருக்கும், தேர்தல் பறக்கும் படையினருக்கும் தகவல் கொடுத்து பைக்கை ஒப்படைத்தனர். ஆனால், பைக்கை அதிமுகவினரிடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர், பணம் விநியோகித்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி,  வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் மருதுகணேஷ் தலைமையில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, திமுகவினர் கலைந்து சென்றனர்.

Tags : AIADMK ,RK Nagar constituency ,Port DMK ,Sekarbabu , RK Nagar constituency, for voters, money, AIADMK
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...