×

மும்பை பறந்தனர் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்

சென்னை: ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று மும்பை சென்றது. ஐபிஎல் தொடர் வரலாற்றில்  2020 தொடரில் தான்  சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) அணி முதல்முறையாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. அதனால் இந்த முறை பழைய நிலைமைக்கு திரும்ப வேண்டும் என்பதில் சிஎஸ்கே நிர்வாகமும், கேப்டன் டோனியும் தீவிரமாக உள்ளனர். அதற்காக முதல் அணியாக சிஎஸ்கே  பயிற்சியை  தொடங்கியது. கேப்டன் டோனி தலைமையில்  வீரர்கள் மார்ச் 8ம் தேதி முதல்  சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கில் பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.


இந்நிலையில் ஐபிஎல் போட்டியின் 14வது தொடர் அட்டவணை அறிவிக்கப்பட்டது. முதல் போட்டி  ஏப்.9ம் தேதி சென்னையில் நடக்கிறது. ஆனால் சிஎஸ்கே மோதும் லீக் போட்டிகள் அனைத்தும்  மும்பை(5 ஆட்டங்கள்), டெல்லி(4 ஆட்டங்கள்), பெங்களூர்(3ஆட்டங்கள்), கொல்கத்தா(2 ஆட்டங்கள்)  நகரங்களில் நடக்கின்றன.  


அதன்படி மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில் சிஎஸ்கே  ஏப்.10ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதுகிறது. அதற்காக டோனி தலைமையிலான சென்னை அணி நேற்று விமானம் மூலம் மும்பை புறப்பட்டுச் சென்றது. அங்கு கொரோனா பரிசோதனை  முடிந்ததும் பயிற்சியை தொடங்குகின்றனர். சிஎஸ்கே வீரர்கள் மும்பை சென்றது குறித்து அறிவித்த அணியின் தலைமை செயல் அலுவலர்  கே.எஸ்.விசுவநாதன், ‘2020 ஐபிஎல் தொடர் முடிந்ததும், டோனி அடுத்த தொடருக்கு மார்ச் முதல் பயிற்சியை தொடங்கி விடலாம் என்றார். சொன்னது போல் மார்ச் மாதம் சென்னை வந்து நின்றார். இந்த தொடரில் கட்டாயம் சாதிப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார் டோனி.

Tags : Chennai Super Kings ,Mumbai , Mumbai, Chennai Super Kings, players
× RELATED காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து...