இன்று இங்கிலாந்துடன் 2வது ஒருநாள் தொடர் வெற்றி முனைப்பில் இந்தியா

புனே: இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் புனே நகரில் நடைபெற்று வருகிறது.  முதல் ஒருநாள் ்போட்டியில் இந்தியா 66ரன் வித்தியாசத்தில் வென்றது. அதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில் இப்போது இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2வது ஒருநாள் பகல்/இரவு போட்டி இன்று  நடக்கிறது. டெஸ்ட், டி20 தொடர்களை இழந்த இங்கிலாந்து  அணி  ஒருநாள் தொடரை கைப்பற்ற, இன்றைய போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும். ஏற்கனவே முன்னிலை வகிக்கும் இந்தியா, இந்த இன்றைய ஆட்டத்தில் வென்றால் ஒருநாள் தொடரையும்  கைப்பற்றி விடும். அதனால் இன்றைய போட்டியில் வெல்ல இங்கிலாந்து கூடுதல் வேகம் காட்டும். அதற்கேற்ப, இங்கிலாந்து அணியில் திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. முதல் ஒருநாள் போட்டியில் கூட ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய் இருவரும் வலுவான தொடக்கத்தை தந்தனர். அதன் பிறகு வந்த கேப்டன் இயான் மோர்கன் உட்பட எந்த வீரர்களும் நிலைத்து நின்று ஆடாதது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

வீரர்கள் நிலைத்து நின்று ஆடினால், முழுநேர பந்து வீச்சாளர்களும் பென் ஸ்டோக்ஸ் போல் பந்து வீசினால் இங்கிலாந்துக்கு வெற்றி வசப்படும்.  ஆனால் அதற்கு இந்திய அணி வழிவிடும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. காரணம் இங்கும் திறமையான வீரர்கள் அதிகம். முதல் போட்டியில் அனுபவ வீரர்கள் மட்டுமின்றி, அறிமுக வீரர்களும் அதிரடியாக விளையாடி வெற்றியை வசப்படுத்தினர். எனினும் இந்திய அணியில் மாற்றம் இருக்கும். காயம் காரணமாக விலகியுள்ள ஸ்ரேயாசுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அல்லது ஷூப்மன் கில், குல்தீப் யாதவுக்கு பதில் வாஷிங்டன் சேர்க்கப்படலாம். புதுமுக வீரர் பிரசித் கிருஷ்ணா அசத்தியுள்ளதால் முகமது சிராஜ், நடராஜன் ஆகியோருக்கு ஆட வாய்ப்பு கிடைக்காது. அதேபோல் இங்கிலாந்து அணியில் கட்டாயம் மாற்றம் இருக்கும். எப்படி இருந்தாலும் இந்தியாவின் தொடர் வெற்றிக்கு தடை போட இங்கிலாந்து வேகம் காட்டும்.  தொடர் வெற்றிகளை குவிக்கும் இந்திய அணி அதனை உற்சாகமாக எதிர்கொள்ளும். அதனால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும்.

Related Stories:

>