கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாடாளுமன்றம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: 14 நாட்களுக்கு முன்பாகவே முடிந்தது பட்ஜெட் தொடர்

புதுடெல்லி: ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 29ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 8ம் தேதி வரை இத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற இருந்தது. பிப்ரவரி 1ம் தேதி மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பின்னர், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் முதல் கட்டத் தொடர் முன்கூட்டியே முடிக்கப்பட்டது. பட்ஜெட் தொடரின் 2ம் கட்ட கூட்டம், கடந்த 8ம் தேதி தொடங்கியது. இது, ஏப்ரல் 8ம் தேதி வரையில் நடத்தப்பட இருந்தது. ஆனால், 5 மாநில சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டத் தொடரை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருவதால், அவையை நடத்தவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த பரபரப்பான சூழலில் நேற்று தற்காலிக சபாநாயகர் பார்ட்ரூ மெதாப் தலைமையில் மக்களவை கூடியது. இதில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவை தொடங்கியதும்  சபாநாயகர் ஓம்பிர்லா விரைவில் குணமடைய வேண்டுவதாக தெரிவித்த மெதாப், அவையை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதேபோல், மாநிலங்களவையும் நேற்று கூடியதும் அவையின் தலைவர் வெங்கையா நாயுடு, பட்ஜெட் தொடரில் நடந்த அலுவலங்களை பட்டியலிட்டார். ‘‘ஜனவரி 29ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை 33 அமர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், 23 அமர்வுகளுடன் அவை முடிக்கப்படுகிறது,” என்றார். இதைத் தொடர்ந்து, தேதியை குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்படுவதாக அவர் அறிவித்தார். இதன் மூலம், திட்டமிடப்பட்ட தேதிக்கு 14 நாட்களுக்கு முன்பாகவே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

Related Stories:

>