×

கட்டுப்பாட்டை இழந்து குறுக்கே நின்றது சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரமாண்ட சரக்கு கப்பல்: 150 கப்பல்கள் கடக்க முடியாமல் தவிப்பு

இஸ்மைலியா: எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் பிரமாண்ட சரக்கு கப்பல் காற்றினால் திசை மாறி குறுக்கே நின்றதால், அப்பகுதியை கடக்க முடியாமல் 150க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் தவிக்கின்றன. ஆப்பிரிக்க கண்டத்துக்கும், சினாய் தீபகற்பத்துக்கும் இடையிலான சூயஸ் கால்வாய் செயற்கையாக உருவாக்கப்பட்டதாகும். எகிப்து நாட்டில் உள்ள இந்த வழித்தடத்தின் மூலமே ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டங்கள் இணைக்கப்படுகின்றன. இதனால், சூயஸ் கால்வாய் பல்வேறு நாடுகளை இணைக்கும் வர்த்தகம், கடல் வழித்தடமாக விளங்குகிறது. இந்நிலையில், ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சரக்கு ஏற்றி செல்லும் பனாமா நாட்டை சேர்ந்த `எவர் கிவன்’ என்ற மிக பிரமாண்டமான சரக்கு கப்பல், நேற்று முன்தினம் சூயஸ் கால்வாயை கடந்து சென்றபோது திடீரென பயங்கர காற்று வீசியது. இதனால், மாலுமியின் கட்டுப்பாட்டை மீறி அந்த கப்பல் திசை திரும்பி, கால்வாயின் குறுக்கே திரும்பி நின்றது. மேலும், மணல் திட்டில் சிக்கி தரை தட்டியது.

கடந்த இரு தினங்களாக இழுவை கப்பல் உதவியுடன் அக்கப்பலை இழுக்கவும், சிறு படகுகளின் உதவியுடன் அதனை அசைக்கவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இந்த கால்வாய் முக்கியமான கடல் வழித்தடமாக இருப்பதால், மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள சயீத் துறைமுகம், செங்கடல் பகுதியில் உள்ள சூயஸ் துறைமுகம் எகிப்தில் உள்ள கிரேட் பிட்டர் லேக் பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் சூயஸ் கால்வாயை கடக்க வழியின்றி வரிசை கட்டி காத்திருக்கின்றன. கப்பலை இழுக்க மேலும் பல நாட்களாகும் என கருதப்படுவதால், வர்த்தகம் பெரியளவில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நிபந்தனையற்ற மன்னிப்பு
`எவர்கிவன்’ கப்பலின் உரிமையாளரான ஜப்பானை சேர்ந்த ஷோயி கிசென் கூறுகையில், ``கப்பல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து கப்பலை மீட்க முழு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இது மிகவும் கடினமானதாக தோன்றுகிறது. இதனால், கால்வாயை கடக்க முடியாமல் கப்பல்கள் காத்திருப்பதற்காக மன்னிப்பு கேட்டுகிறேன்,’’ என்றார்.

Tags : Suez Canal , Control, lost, stalled Suez, huge cargo ship
× RELATED சூயஸ் கால்வாயில் 2 கப்பல்கள் மோதல்