ஒருதலைபட்சமாக செயல்படும் எஸ்.ஐ.டி இளம்பெண் வெளியிட்ட2வது வீடியோவால் பரபரப்பு

பெங்களூரு: எஸ்.ஐ.டி போலீசார் ரமேஷ் ஜார்கிஹோளிக்கு ஆதரவாக செயல்படுவதாக சி.டி வழக்கில் தொடர்புடைய இளம் பெண் தனது 2வது சி.டியை  வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சராக பணியாற்றி வந்த ரமேஷ் ஜார்கிஹோளி இளம்  பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த ஆபாச சி.டி சமூக வலைத்தளம் மற்றும் மீடியாக்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து  அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவருடன் சேர்ந்து மேலும் 6 எம்.எல்.ஏக்கள் பதட்டம் அடைந்து,  நீதிமன்றத்தில் தடை உத்தரவு  பெற்றனர். இதனால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் சி.பி.ஐ விசாரணை வேண்டுமென்று கூறினர். ஆனால் உள்துறை  அமைச்சர் எஸ்.ஐ.டி விசாரணை போதுமானது என்று கூறினர். ஐ.பி.எஸ் அதிகாரி சோமந்த் முகர்ஜி தலைமையில் தனி குழு அமைத்தார்.

இதற்கிடையில் ரமேஷ் ஜார்கிஹோளி தரப்பில் எஸ்.ஐ.டியில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த எஸ்.ஐ.டி சி.டியை வெளியிட்டது,  தயாரித்தது, ஆடியோ ரெக்கார்டு செய்ததாக கூறி 7 பேரை கைது செய்தனர். ஆனால் சி.டியில் உள்ள இளம் பெண் மற்றும் பத்திரிகையாளர் ஒருவர்  உள்பட 3 பேர் மட்டும் எஸ்.ஐ.டியின் பிடியில் சிக்கவில்லை. அவர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தாலும் ஒவ்வொரு நேரமும் புதிய  வழிமுறையில் ஏதாவது ஒரு சி.டியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி நேற்று சி.டி வழக்கில் தொடர்புடைய இளம் பெண்  தனது 2வது வீடியோவை வெளியிட்டுள்ளார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது; ``எனது பெற்றோர் நான் மாயமானதாக புகார் அளித்திருப்பதாக கூறுவது உண்மை இல்லை. என்னை குறித்து எனது பெற்றோருக்கு தெரியும். என் மீது அவர்கள் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

அதே நேரம் எப்படி நான் கடத்தப்பட்டதாக புகார் அளிக்க முடியும். முன்கூட்டியே நான் கூறியிருந்தேன். எனது பெற்றோருக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டுமென்று. இந்த வழக்கை பொறுத்தவரையில் எனக்கும் என்னுடைய பெற்றோருக்கு பாதுகாப்பு கிடைத்தால் மட்டுமே எஸ்.ஐ.டி முன்பு ஆஜராகி விளக்கம் அளிப்பேன். ஆனால் எஸ்.ஐ.டி தரப்பு அதற்கு வழிவகை செய்யவில்லை. மாறாக ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறார். முதலில் நான் வெளியிட்ட வீடியோவை மார்ச் 12ம் தேதி நகர போலீஸ் கமிஷனர் மற்றும் எஸ்.ஐ.டிக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அதே நாளில் ரமேஷ் ஜார்கிஹோளி போலீசில் புகார் அளிக்கிறார்.

முன்னதாக வெளியிடவேண்டிய என்னுடைய வீடியோவை, 13ம் தேதி வெளியிட்டுள்ளனர். எதற்காக இந்த மாற்றம் என்பது தெரியவில்லை. இதற்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா, டி.கே சிவகுமார், ரமேஷ் குமார் ஆகியோர் தலையிட்டு தீர்வு காணவேண்டும். என்னுடைய பெற்றோருக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும். எனக்கும் பாதுகாப்பு வேண்டும். அப்போது நானே வந்து எஸ்.ஐ.டி முன்பு ஆஜராகிறேன் என்று தனது 2வது சி.டியில் தெரிவித்துள்ளார். இது எஸ்.ஐ.டி அதிகாரிகள் அதிருப்தி அடைய செய்துள்ளது. டி.சி.பி அனுசேத், ஹரிஷ் உள்பட எஸ்.ஐ.டி தனிப்படையை சேர்ந்த அதிகாரிகள், நேற்று 3 முறை ஒன்று கூடி இது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது சி.டி லேடி எங்கிருந்து பேசுகிறார்.

எப்படி அவர் வீடியோவை பதிவிட்டு, அனுப்புகிறார். யார் அவருக்கு உதவி செய்கிறார்கள். இதுவரை அவரை குறித்து கிடைத்த தகவல்கள் மற்றும் உறவினர்கள், குடும்பத்தினர் இருக்கும் இடம் ஆகிய விவரங்களை பரிமாறி கொண்டனர். மேலும் வழக்கு அடுத்த கட்டத்திற்கு செல்வதற்குள், சி.டி லேடியை கைது செய்யவேண்டுமென்று திட்டமிட்டுள்ளனர். இதற்காக தனிப்படை அதிகாரிகள் டெல்லி, மும்பை, கோவா, சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களுக்கு சென்று, ஓட்டல், பெண்கள் விடுதி, பஸ் , ரயில் நிலையங்களில் இருக்கு சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றி தேடி வருகின்றனர்.

Related Stories: