புதுடெல்லி: சதாம் உசேன் பாணியில் மனைவி குடும்பத்திற்கு விஷம் கொடுத்த கொடூர கணவன் கைது செய்யப்பட்டார். இதில் 2 பேர் பலியானார்கள். 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தனது அரசியல் எதிரிகளை ஒழிக்க தாலியம் என்ற விஷ வேதிப்பொருளை பயன்படுத்துவார் என்று கூறப்படுவது உண்டு. இதை சாப்பாட்டில் கலந்து கொடுத்துவிடுவார்கள். அந்த விஷம் கலந்த உணவை சாப்பிட்டவர்கள் சிறிது நாட்கள் கழித்து இறந்து விடுவார்கள். அதே யுக்தியை டெல்லியில் மனைவி குடும்பத்தையே தீர்த்து கட்ட ஒரு வாலிபர் பயன்படுத்தி உள்ளார். அதன் விவரம் வருமாறு; தெற்குடெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதிைய சேர்ந்தவர் வருண் அரோரா(37). இவரது மனைவி திவ்யா. திருமணமாகி மாமனார் குடும்பத்துடன் வருண் வசித்து வந்தார்.
ஆனால் மாமனார் குடும்பத்தினர் அவரை மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த வருண் அவர்கள் அனைவரையும் தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். வருணின் கனவு நாயகன் சதாம் உசேன். அவரது பாணியில் தனது மனைவி குடும்பத்தை எப்படி தீர்த்துக்கட்டலாம் என்று யோசித்த போது சதாம் உசேன் தனது அரசியல் எதிரிகளை மெதுவாக அழிக்க பயன்படுத்தும் தாலியம் என்ற வேதிப்பொருளை உணவில் கலந்து கொடுத்து விடுவது என்று முடிவு செய்தார். அதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் வீட்டில் வைத்த மீன் குழம்பில் தாலியம் வேதிப்பொருளை கலந்து மனைவி திவ்யா, மாமியார் அனிதா, மைத்துனி பிரியங்கா, மற்றும் மாமியார் தேவேந்தர் மோகன்சர்மா ஆகியோருக்கு கொடுத்தார்.
இதை சாப்பிட்ட சில நாட்களில் அதாவது பிப்ரவரி 15ல் மைத்துனி பிரியங்கா இறந்தார். இதில் எந்தவித சந்தேகமும் எழவில்லை. அவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக நம்ப வைத்தார். இதே போல் மாமியார் அனிதா தேவி சர்மாவும் இறந்தார். இதில்தான் டாக்டர்களுக்கு சந்தேகம் வந்தது. முடி கழிதல், கால் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் வந்தன. அதே போல் மனைவி திவ்யா, மாமனார் தேவேந்தர் மோகன் ஆகியோரும் இதே பிரச்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட சோதித்த டாக்டர்கள் தாலியம் வேதிப்பொருள் கலந்து கொடுத்து இருப்பதை கண்டுபிடித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தெற்கு டெல்லி போலீஸ் துணை கமிஷனர் உர்விஜா கோயல் தலைமையில் போலீசார் கிரேட்டர் கைலாஷ் சென்று வருண் அரோராவை பிடித்து விசாரித்தனர். மேலும் வீட்டில் சோதனை நடத்திய போது தாலியம் வேதிப்பொருள் வருண் அறையில் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்தனர். அப்போது மனைவி குடும்பத்தினரை சதாம் உசேன் பாணியில் கொல்ல மீன் குழம்பில் தாலியம் வேதிப்பொருளை கலந்து கொடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார். தன்னை அவர்கள் மனிதாபிமானம் இல்லாமல் நடத்தியதால் இந்த முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் கூறினார். இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.