நடிகர் செந்திலுக்கு மைக் தர மறுத்த சின்னத்திரை நடிகை: நாகர்கோவில் பிரசாரத்தில் பரபரப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ வேட்பாளராக எம்.ஆர்.காந்தி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நகைச்சுவை நடிகர் செந்தில் நேற்று பிரசாரம் செய்தார். பிரசாரம் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் நடந்தது. மாலை 5 மணிக்கு நடிகர்  செந்தில் வருவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் செந்தில் வருகையில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் எம்.ஆர்.காந்தியை ஆதரித்து சின்னத்திரை நடிகை ஜெயலெட்சுமி பிரசாரம் செய்ய வந்தார். திறந்த ஜீப்பில் ஏறி  எம்.ஆர்.காந்திக்கு வாக்கு கேட்டு பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது மாலை 6.30 மணி அளவில் நடிகர் செந்தில் அங்கு வந்தார். நடிகர் செந்தில் வந்ததும், அங்கு கூடியிருந்த மக்கள் செந்தில் பேசப்போகிறார் என ஆரவாரம் செய்தனர். ஆனால் நடிகை ஜெயலெட்சுமி நடிகர் செந்தில் வந்ததை  கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது வேறு ஜீப்பில் இருந்தவர்கள் நடிகர் செந்தில் உங்கள் முன்பு இப்போது பேசபோகிறார் என அறிவித்துக்கொண்டு இருந்தனர். ஆனால் நடிகை ஜெயலெட்சுமி எதையும்  கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசியவாரே இருந்தார்.

மீண்டும் நடிகர் செந்தில் பேசுவார் என அறிவிக்கப்பட்டது. அப்போதும், நடிகை ஜெயலெட்சுமி பேசிக்கொண்டு இருந்தார். இதனால் டென்ஷன் ஆன செந்தில் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், பேசிக்கொண்டு இருந்த ஜெயலெட்சுமியை நீங்கள்  இங்கு வாருங்கள் என அழைத்து தனது பிரசார ஜீப்பில் ஏற்றிக்கொண்டார். அதன் பின்னரே நடிகர் செந்தில் பேசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: