×

திமுகவின் மக்கள் ஆதரவை பொறுத்துக் கொள்ள முடியாமல் வருமான வரித்துறையை ஏவி பாஜக மிரட்டல் விடுக்கிறது: வைகோ அறிக்கை..!

சென்னை: வருமான வரித்துறையை ஏவி பாஜக அரசு மிரட்டல் விடுப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் மு.க.ஸ்டாலின் தங்கி இருந்த அறையில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். திமுகவுக்கு இருக்கும் மக்கள் ஆதரவை பொறுத்துக் கொள்ள முடியாமல் வருமான வரித்துறையை ஏவி பாஜக மிரட்டல் விடுத்துள்ளது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; தமிழ்நாட்டில் நடைபெறப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றியை ஈட்டப் போவதற்குக் கட்டியம் கூறும் வகையில் தமிழ்நாட்டு மக்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் லட்சோபலட்சம் பேர் அணி திரண்டு வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் உறுதி என்பதை அரசியல் வல்லுநர்களின் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மத்திய பாஜக அரசு தனது அரசியல் ஆதாயத்துக்காக வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற அமைப்புகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் செய்து வரும் அதே மிரட்டல், அதிகார அத்துமீறலைத் தமிழ்நாட்டிலும் அரங்கேற்றி இருக்கிறது. இந்நிலையில், அரசியல் களத்தில் அதிமுக - பாஜக கூட்டணியை எதிர்த்து மக்கள் சக்தியைத் திரட்டி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான மக்கள் ஆதரவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பாஜக அரசு வருமான வரித்துறையை ஏவி மிரட்டிப் பார்க்கிறது.

திருவண்ணாமலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கின்ற நிலையில் அவர் தங்கி இருந்த அறை உள்ளிட்ட திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான திருவண்ணாமலை எ.வ.வேலுவின் வீடு, அலுவலகம், கல்லூரி, அறக்கட்டளை அலுவலகம், உறவினர்கள், நண்பர்கள் இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது வன்மையான கண்டனத்துக்குரியது. மத்திய பாஜக அரசின் இத்தகைய மிரட்டல்களால் ஒருபோதும் திமுக கூட்டணியின் வெற்றியைத் தடுத்துவிட முடியாது; எடப்பாடி பழனிசாமி அரசு மற்றும் பாஜக ஆட்சியாளர்களின் கூட்டுச்சதி தூள் தூளாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

Tags : Avi bajka ,Timuka ,Viko Report , The BJP government is threatening the Income Tax Department as it cannot tolerate the popular support of the DMK: Vaiko report ..!
× RELATED விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ....