×

மத்திய அரசின் முடிவு சட்டவிரோதம்!: மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு புதுவை அரசு கொண்டுவந்த 10% இடஒதுக்கீடு நிராகரிப்பு..!!

சென்னை: புதுவை அரசு கொண்டுவந்திருக்கக்கூடிய மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள்ஒதுக்கீடு என்பது நிராகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. புதுவை அரசு கொண்டுவந்திருக்கின்ற இந்த முடிவு சட்டவிரோதம் என்று கூறி நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தனது தரப்பு வாதத்தை முன்வைத்திருக்கிறது. தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம்  உள்ஒதுக்கீடு வழங்கி சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது.

இதேபோல் புதுவை மாநிலத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவப்படிப்பில் 10 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் புதுச்சேரியை சேர்ந்த மாணவி திவ்ய தர்ஷினி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். அதில் புதுவை மாநிலத்தில் மருத்துவப்படிப்பில் சேரக்கூடிய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் கொள்கை அரசின் அமைச்சரவை முடிவை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்த போது, மத்திய உள்துறை சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஒரேநாடு..ஒரேத்தேர்வு என்ற அடிப்படையில்  நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாகும். ஆனால் புதுவையில் கொண்டுவரப்பட்ட சட்டம் என்பது நீட் தேர்வின் தகுதியை நீர்த்துப்போக செய்யும் என்று தெரிவித்தது. தமிழகத்தில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் தொடர்பாக தங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரநாராயணன், புதுவை அமைச்சரவையில் கொண்டுவரப்பட்ட முடிவு என்பது நிராகரிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். இதற்கு மாநில அரசின் சார்பில் ஆஜரான வழங்கறிஞர் வில்சன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது ஏற்கனவே உச்சநீதிமன்றம் உள்ஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது. மேலும் சமூக நீதிக்கு எதிரானது என்று வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நீதிபதி புகழேந்தி ஏப்ரல் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்திருக்கிறார்.


Tags : Central Government , Federal Government, Medical, Government School Student, 10% reservation
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...