×

விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கையை தலைவர் தொல். திருமாவளவன் வெளியீடு

விழுப்புரம்: ஆளும்கட்சியினரின் அத்துமீறலை தடுக்கும் சக்தி தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கையை இன்று அக்கட்சி தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வெளியிட்டார். அதில் பூரண மதுவிலக்கை தேசிய கொள்கையாக வளர்க்க உரிய முயற்சி மேற்கொள்வோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

விசிக தேர்தல் அறிக்கையில் உள்ள 15 வாக்குறுதிகள் விவரம்:
* தலித்துகள், பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரின் மேம்பாட்டுக்கான இட ஒதுக்கீட்டை முற்றாக ஒழித்துக்கட்டும் தீய உள்நோக்கோடு, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் மேற்கொள்ளும் தனியார்மயப்படுத்துதல் போன்ற அனைத்து வகையான சதிமுயற்சிகளையும் முறியடித்து சமூகநீதியைப் பாதுகாப்போம்.

* ஆர்எஸ்எஸ் அமைப்பின் நெடுங்கால கனவுத் திட்டமான இந்துராஷ்டிரத்தை அமைக்க பெருந்தடையாக உள்ள இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மெல்ல மெல்ல நீர்த்துப்போக செய்யும் பாஜகவின் சூது, சூழ்ச்சிகளை அம்பலப்படுத்துவோம். அதற்காக அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகள் கைகோர்த்துப் போராடுவோம்.

* ஏகாதிபத்திய, சார்பு பொருளாதாரக் கொள்கைகளையும் அதனடிப்படையிலான தனியார்மயமாதல் அல்லது கார்ப்பரேட்மயமாதலையும் தடுத்துநிறுத்த தொடர்ந்து மக்களை அரசியல்படுத்துவோம்.

* மொழிவழி தேசியம், மாநில உரிமைகள் மற்றும் மாநில சுயாட்சி ஆகியவற்றைப் பாதுகாத்து
அரசியலமைப்பு சட்டம் முன்மொழியும் கூட்டாட்சி முறையைப் பாதுகாப்போம்.

* மகளிர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பையும் மேம்பாட்டையும் உறுதிப்படுத்த குறிப்பாக, சட்டம் இயற்றும் அவைகளில் 50 விழுக்காடு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையிலான இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவர, பெண்ணியவாதிகள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளோடு ஒருங்கிணைந்து களப்பணியாற்றுவோம்.

* சாதியின் பெயரால் மற்றும் மதத்தின் பெயரால் இங்கே தொடர்ந்து விதைக்கப்பட்டு வரும் வெறுப்பு அரசியலையும் அதனடிப்படையிலான சமூகப்பிரிவினைப் போக்குகளையும் தடுத்திட அனைத்து தரப்பு உழைக்கும் மக்களையும் அணியப்படுத்துவோம்.

* முற்போக்கு ஜனநாயக சக்திகளைத் தீவிரவாதிகள், தேசவிரோதிகள், மாவோயிஸ்ட்டுகள் என முத்திரை குத்தி, அவர்களுக்கு எதிராக ஏவப்படும் அரச பயங்கரவாத ஒடுக்குமுறைகளை எதிர்த்து மக்களைத் திரட்டி போராடுவோம்.

* ஒரே தேசம் - ஒரே கல்வி என்னும் அடிப்படையில், தேசிய கல்விக் கொள்கையை வரையறுத்து, அதன்மூலம் ஒரே மதம் - ஒரே மொழி - ஒரே கலாச்சாரம் என்னும் சங்பரிவாரத்தின் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த, பாஜக மேற்கொள்ளும் பாசிச முயற்சிகளை மக்கள் துணையுடன் முறியடிப்போம். மாநில அரசுகளே கல்விக் கொள்கையை வரையறுக்கும் வகையில் கல்வி தொடர்பான அதிகாரங்களை மாநிலங்களுக்கான பட்டியலில் இடம்பெற செய்ய தொடர்ந்து களமாடுவோம்.

* விவசாயம், தொழில் வளம், வணிகம் போன்ற யாவற்றையும் கார்ப்பரேட்மயமாக்கி, சிறு-குறு நடுத்தர விவசாயிகள், தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்கள் ஆகிய அனைவரையும் வலுவிழக்கச் செய்யும் வகையில் செயல்படும் பாஜகவின் துரோக நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி, பாஜக அரசு கொணர்ந்துள்ள வெகுமக்களுக்கு விரோதமான வேளாண் சட்டங்கள் மற்றும் தொழிலாளர் சட்டங்களை பாட்டாளி மக்களின் பேராதரவோடு தூக்கி எறிவோம்.

* நீர், நிலம், காற்று ஆகியவற்றை நஞ்சாக்கிப் பாழ்ப்படுத்தும் வகையிலான ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்துப் போராடி, விவசாயம், குடிநீர் போன்றவற்றையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குரிய வாழ்வாதரங்களான சுற்றுச்சூழலையும் பாதுகாப்போம்.

* பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களின் நலன்களையும் மேம்பாட்டையும் பாதுகாத்திட தொடர்ந்து பாடுபடுவோம்.

* கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை கட்டணமின்றி வழங்கிடவும் மற்ற இலவச திட்டங்களை முற்றாக ஒழித்திடவும் வலியுறுத்திப் போராட மக்களிடையே விழிப்புணர்வை
வளர்த்தெடுப்போம்.

* லட்சக்கணக்கான குடும்பங்களைப் பாழ்படுத்தி சிதறடித்து, அவற்றை நடுத்தெருவில் நிற்கவைத்துள்ள தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளை நிலையாக மூடுவதற்கு மக்கள் துணையோடு தொடர்ந்து போராடுவோம். மதுவிலக்கை தேசிய கொள்கையாக வளர்த்தெடுக்க உரிய முயற்சிகளை மேற்கொள்வோம்.

* ஈழத்தமிழர் சிக்கலுக்குத் தமிழீழம் ஒன்றே தீர்வு என்பதை ஐநா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திற்கு உணர்த்துவதும் அதன்வழி அனைத்துலக நாடுகளின் நன்மதிப்பையும் நல்லாதரவையும் வென்றெடுப்பதும்தான் அதற்குரிய நிலையானதொரு அரசியல் தீர்வைக் காண்பதற்கான வழியாகும் என்கிற புரிதலோடும் நம்பிக்கையோடும் உலகத்தமிழர்களை ஒருங்கிணைப்பதும் ஒற்றுமையைக் கட்டமைப்பதும் இன்றைய இன்றியமையாத தேவையாகும். அதனடிப்படையில், ஈழத்தமிழர் நலன்களில் அக்கறையுள்ள அனைத்து ஜனநாயக சக்திகளோடும் இணைந்து தொடர்ந்து உரிய களப்பணிகளை மேற்கொள்வோம்.

* சிங்கள ஆட்சியாளர்களை ஆதரிப்பதன் மூலமே இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியுமென்கிற நம்பிக்கையில், தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டுவரும் இந்திய அரசின் நிலைப்பாடு மற்றும் இலங்கை அரசுடனான அதன் வெளியுறவு கொள்கை ஒரு தேசிய இனத்தையே சிதறடித்துச் சின்னாபின்னமாகச் சிதைத்துள்ளது. ஈழத்தமிழர்களைச் சொல்லொணா துயரங்களுக்கு ஆளாக்கியுள்ளது. லட்சக்கணக்கான உழைக்கும் மக்களைப் பலியாக்கியுள்ளது. இந்திய நலன்களைப் பாதுகாப்பதற்காக ஏழை, எளிய அப்பாவி ஈழத்தமிழர்களைப் பல பத்தாண்டுகளாக அழித்தொழிக்கும் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு துணைபோவது மிகுந்த வேதனைக்குரியதாகும்.

ஈழத்தமிழர்களைப் பாதுகாப்பதும், ஈழ விடுதலைக்கு துணையிருப்பதும்தான் இந்திய தேசத்திற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமென்பதை இந்திய ஆட்சியாளர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது தமிழ்ச்சமூகத்தின் கடமையாகும். அதனடிப்படையில், தேசிய இனவிடுதலை கருத்தியலில் நம்பிக்கையுடைய ஜனநாயக சக்திகளோடு இணைந்து நின்று, ஈழத்தமிழருக்கு ஆதரவாக இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவர உரிய முயற்சிகளை மேற்கொள்வோம் என்று விசிக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மீனவர்களை சிறைபிடித்த சிங்கள அரசுக்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்கமளிப்பதால் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கச்சத்தீவை மீட்கவும், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக கூட்டணி ஒட்டுமொத்த தமிழ் தேசியத்திற்கு தீங்கு விளைவிக்கும் அணி என திருமாவளவன் குற்றச்சாட்டு வைத்தார். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு தேர்தலை நடத்துவதில் மட்டுமே உள்ளது. எனவே கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்தை மட்டுமே பறிமுதல் செய்து வருகிறது. ஆளும்கட்சியினரின் அத்துமீறலை தடுக்கும் சக்தி தேர்தல் ஆணையத்திற்கு இல்லை, வன்னியர் உள்ஒதுக்கீடு உரிய மக்களுக்கு சென்று சேர வாய்ப்பில்லை மற்றும் கருத்துக்கணிப்பு குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.


Tags : Liberation Leopards Party , Liberation Tigers of Tamil Nadu (LTTE) election manifesto Published by Thirumavalavan
× RELATED விசிக பிரசாரத்தில் தொண்டர்கள் மோதல் போலீஸ் தடியடி