முதல்வர் பழனிச்சாமி வருகை எதிரொலி!: உசிலம்பட்டியில் அதிமுக எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபடும் சீர்மரபினர் சங்க நிர்வாகிகள் கைது..!!

மதுரை: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வருகையை ஒட்டி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சீர்மரபினர் சங்க நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சீர்மரபினருக்கான டி.என்.டி. சான்றிதழிலில் உள்ள குளறுபடிகளை சரி செய்யவும், கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீட்டை அறிவிக்கக் கோரியும் சீர்மரபினர் நல சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் அவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் தொகுதியில் இன்று பரப்புரை மேற்கொள்கிறார்.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீர்மரபினர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள் காசிநாதன், செல்வகணேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சங்க நிர்வாகிகள் தவமணியம்மாள், தமிழ்செல்வி உள்ளிட்ட சிலரையும் காவலர்கள் தேடி வருகின்றனர். முதல்வர் வருகையையொட்டி அதிமுக எதிர்ப்பு பிரச்சாரத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது தற்போது வரை எந்தவித வழக்கும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: